இயக்குநர் வெற்றிமாறன் வழங்கியுள்ள திரைப்படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. ஆர்.டி.எம் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் தனன்ஜெயனின் Creative Entertainers and Distributors நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.
பெற்றோர்களின் துணையேதுமின்றி, காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியுடன், உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து கொண்டு, சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கதையின் நாயகன் சுரேஷ் ரவி. இப்படியான சூழலில் காவல்துறையினர் நடத்தி கொண்டிருந்த வாகன பரிசோதனையில் இவர் எதிர்பாராத விதமாக சிக்கி கொள்ள, உயரிதிகாரி மைம் கோபிக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தொடர்ந்து மனைவியின் கண் எதிரே அவர் அடித்து உதைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார். அதிகாரத்தின் கோரப்பிடியில் சிக்கி கொண்ட, இந்த சாமனிய மனிதனின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும், அதை தொடர்ந்து அவருக்கு என்ன நடந்தது..? என்பதுமே இப்படத்தின் மீதிக்கதை.
ஒரு சாதாரண மனிதன் காவல்துறையின் அதிகாரத்தை மீறி, எதுவும் செய்ய முடியாத ஆற்றாமையை படம் முழுக்க சுமந்து திரிகிறார் சுரேஷ் ரவி. அவரின் அப்பாவித்தனமான முகம் அதற்கு சரிவர பொருந்துகிறது. பல ஹீரோயின்களுக்கு பின்னணி குரலாக ஒலித்த ரவீனா ரவி, கனமான உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பிலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.
படத்தின் வில்லனாக, பார்வையாளர்களை தன் பார்வையாலேயே பயமுறுத்தி பார்க்கிறார் மைம் கோபி. காவல்துறை அதிகாரிக்கே உரிய இறுக்கத்தையும், ஆங்காங்கே நக்கலான திமிரையும் கலந்து கட்டி வில்லத்தனம் காட்டி ஸ்கோர் செய்கிறார். மற்ற துணை நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து செல்கிறார்கள்.
ஆதித்யா - சூரியாவின் இசை பாடல்களில் இதமாகவும், பின்னணி இசையில் மிரட்டலாகவும் ஒலித்து கூடுதல் பலம் சேர்கிறது. ஒளிப்பதிவாளர் விஷ்ணுவின் கேமராவும் வடிவேல் - விமல்ராஜின் எடிட்டிங்கும் படத்தை தொய்வின்றி கடத்தி செல்ல உதவுகிறது.
"காவல்துறையினர் பப்ளிக் சர்வன்ட் இல்லை, அவர்களுக்கு பப்ளிக்தான் சர்வன்ட்'' போன்ற பல நறுக் வசனங்கள் மூலம் கைத்தட்டல்களை பெறுகிறார் வசனகர்த்தா ஞானகரவேல். ஆனால், வசனங்களை முன்னிறுத்தியே கதை சொல்ல முயற்சி செய்திருப்பது, கொஞ்சம் சலிப்பை தந்து விடுகிறது.
ஒரு சராசரி மனிதன் காவல்துறை அதிகாரியிடம் குரலை உயர்த்தி கூட பேச முடியாத அளவில் இங்கே நிறுவப்பட்டிருக்கும் அதிகார கட்டமைப்புகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார் இயக்குநர் ஆர்.டி.எம். காவல்துறை உங்கள் நண்பன் என்பது பெயரிளவில் வாக்கியமாகவே மட்டுமே இருக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார். அதற்காகவே இயக்குநரை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நாம் அன்றாடம் பார்த்து கடந்த சென்ற வலி மிகுந்த உண்மைகளையும் கண்முனே கொண்டு வந்து யோசிக்க வைக்கிறார்.
அதே போல, முழுக்க முழுக்க காவல்துறையின் தவறை மட்டுமே சுட்டிக்காட்டாமல், அங்கிருக்கும் நல்ல விஷயங்களையும் கவனமாக கையாண்டு கவரவும் செய்கிறார். சுரேஷ் ரவி - ரவீனாவுக்கு இடையேயான உறவையும், சராசரி மனிதர்களுக்கே உரித்தான சந்தோஷங்களோடும் துயரங்களோடும் காட்சிப்படுத்தியிருப்பது அழகு.
முதல் பாதியில் தேவையான அதிர்வுகளை திரைக்கதையில் புகுத்தி, நம்மை கட்டிப்போடும் படக்குழு, அதை இரண்டாம் பாதியில் தவறவிட்டிருப்பது லேசான ஏமாற்றத்தை தருகிறது. இன்னும் அழுத்தமாக சொல்லகூடிய வகையில் கனமான கதைக்களம் அமைந்திருப்பினும், அது அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமே சொல்லப்பட்டிருப்பது வருத்தம்தான். ஆங்காங்கே சில லாஜிக் ஓட்டைகளும் எட்டிப்பார்க்கின்றன.
(பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு முன்னோட்ட காட்சியின் (நவம்பர் 23) அடிப்படையில் இவ்விமர்சனம் எழுதப்பட்டுள்ளது. நவம்பர்-27 முதல், இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.)