துல்கர் சல்மான், கௌதம் மேனன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. வியகாம் 18 மற்றும் ஆன்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ள இந்த படத்தை தேசிங் பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார்.
ஆப் டெவலப்பர்ஸாக துல்கர் சல்மான் , தர்ஷன் இணைந்து ஸ்மார்டான ஃபோர்ஜெரி வேலைகளில் ஈடுபடுகின்றனர். இருவரும் தங்களது காதலிகளான ரிது வர்மா, நிரஞ்சனியுடன் குறிப்பிட்ட பணத்துடன் செட்டிலாக விடலாம் என நினைக்க, போலீஸான கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களை துரத்துகிறார். முடிவு என்ன ஆனது என்பதே இந்த படத்தின் கதை.
மாடர்ன் இளைஞன் கம் ஸ்மார்ட்டான டெக்கியாக சித்தார்த் என்ற வேடத்துக்கு துல்கர் சல்மான். தனது ஷார்ப்பான பார்வையாலேயே தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் அளவுக்கு நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அவரது நண்பராக தர்ஷன். முதல் படம் என்று எண்ண முடியாத அளவிற்கு தனது வேடத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். அவரது ஒன் லைனர்களால் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கின்றன.
போலீஸாக கெளதம் மேனன். ரவுடிகளை மிரட்டி விட்டு வரும் அறிமுக காட்சியிலேயே நான் கிளாஸ் மட்டுமல்ல மாஸ் என்பதை காட்டியிருக்கிறார். சில தடுமாற்றங்கள் இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை நிறைவாக செய்துள்ளார் ரிது வர்மா. அவரது தோழியாக நிரஞ்சனா அகத்தியன் நல்ல அறிமுகம்.
ஹரிஷ்வர்தன் ரமேஷ்வர் பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறார். காட்சிகளை நேர்த்தியாகவும் கலர்ஃபுல்லாகவும் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன்.
குறைவான கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு திரைக்கதையில் ஸ்மார்ட்டான ட்விஸ்ட்டுகள் மூலம் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி. ஆங்காங்கே வரும் எதிர்பாராத ட்விஸ்டுகள் படத்தை சுவாரஸியப்படுத்துகின்றன.
முதல் பாதியில் துல்கரும் தர்ஷனும் செய்யும் வித்தியாசமான ஃபோர்ஜெரி வேலைகள், காதல் காட்சிகள் , கௌதம் மேனன் அவர்களை பின் தொடர்வது என இயல்பாக சென்றது. ஆனால் துல்கர் சல்மான் செய்யும் சில ட்ரிக்குகள் நம்பும்படி காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப தோன்றியது. ஆனாலும் திரைக்கதையில் காமெடி, ட்விஸ்ட்டுகள் என படத்தை சுவாரஸியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.