போலி டிகிரி சான்றிதழ் தயாரிக்கும் தொழில் செய்யும் சிவகார்த்திகேயன் மாணவி ஒருவருக்கு நேர்மையாக காலேஜ் சீட் வாங்க முயற்ச்சிக்கிறார். அப்போது எதிர்கொள்ளும் மாணவர்களின் 'ஐடியாக்களை கொல்லும்' வில்லனை அழிக்க எடுக்கும் அவதாரம் தான் 'ஹீரோ'.
சிவகார்த்திகேயன் தன் வழக்கமான துறுதுறுப்போடு அற்புதமாக நடித்திருக்கிறார். அவர் அடிக்கும் ஜோக்குக்கு 'சிரிப்பு வரல' என்று கலாய்ப்பவரிடம் 'அதான் நாங்களே சிரிச்சுக்குறம்' என்று சொல்லும் இடம் தியேட்டரில் ஆரவாரம். நாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் மதி கேரக்டரில் வரும் இவானா மனதில் நிலைக்கிறார்.
Batmanக்கு Alfred Pennyworth போல சிவகார்த்திகேயனுக்கு அர்ஜுன். நடித்திருக்கும் கதாப்பாத்திரத்தில் கச்சிதம். 'ஜெண்டில்மேன்' ரெஃபரன்ஸ் காட்சிக்கு க்ளாப்ஸ். ஆக்ஷனில்... கேட்கவா வேண்டும்?
வில்லனாக வரும் அபய் தியோல் கொஞ்சம் அதிகமாகவே Self Intro தருகிறார். பெரிய பெரிய திட்டங்களுக்கு மூளையாக இருக்கும் வில்லன்கள் ஏன் தங்கள் Master Planஐ ஹீரோவிடம் உளறுகிறார்களோ தெரியவில்லை. அபய் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல.
மாணவர்களின் திறமையை மார்க்கை வைத்து எடைபோடும் சிஸ்டத்தை நறுக்கென கேள்வி கேட்கிறார் பி.எஸ். மித்ரன். மாணவர் தற்கொலை எண்ணிக்கை அதிகம் கொண்ட நம் நாட்டில் அதன் அடிவேர்களை ஆராய்ந்ததில் மெனக்கெடல் தெரிகிறது. சொல்ல வந்த கருத்து முதன்மை பெறுவதால் சூப்பர் ஹீரோ சாகசங்கள் அதிகமாக காட்டப்படவில்லை. மாணவர்கள் கண்டுபிடிக்கும் சூப்பர்ஹீரோ கேட்ஜட்கள் கவனம் ஈர்க்கின்றன.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் அனல் சேர்த்திருக்கிறது. ஜார்ஜ் வில்லிதம்ஸின் ஒளிப்பதிவில் ஹாலிவுட் தரம்.
காலத்தின் யதார்த்தத்தை, ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டாக ஆக்கி, எந்த ஹாலிவுட் சாயலும் படாமல் எடுத்தது ஒரு முக்கிய ஹைலைட்.