வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஃபுரோஸன் 2. ஆரண்டெல் என்னும் நகரின் மகாராணி எல்சா. அவருக்கு பார்ப்பதை எல்லாம் பனியாக்கும் சக்தி இருக்கிறது. அவரது தங்கை ஆனா. ஆரெண்டல் நகருக்கு புதிதாக ஆபத்து ஒன்று வருகிறது. மேலும் ஆரெண்டெல் நாட்டுக்கு அருகிலிருந்து எல்சாவுக்கு மட்டும் ஒரு குரல் பிரத்யேகமாக கேட்கிறது.
இதனையடுத்து ஆரெண்டல் நாட்டுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம் என்ன ? எல்சாவிற்கு கேட்கும் குரலின் பின்னெணி என்ன என்பதை கண்டறிய எல்சா, அன்னா, கிரிஸ்டோஃப், ஓலஃப் எனும் பனி மனிதன் ஆகியோர் அருகே இருக்கும் பனிக்காட்டுக்கு செல்கின்றனர். அங்கே அவர்கள் அந்த மர்மங்களுக்கான விடையை கண்டுபிடிக்கிறார்களா ? என்பதே படத்தின் கதை.
ஆரண்டல் நாடு, எல்சா, ஆனா, ஓலாஃப், கிரிஸ்டோஃப் என நாம் முதல் பாகங்களில் பார்த்த முகங்கள் என படம் ஆரம்பமே ரகளையாக தொடங்குகிறது. குறிப்பாக இந்த பாகத்துக்கென்று ஒரு தனிக்கதையுடன் தொடங்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
ஃபுரோஸன் 2வின் தமிழ் வெர்ஷனில் எல்சாவிற்கு ஸ்ருதிஹாசன், ஆனாவிற்கு டிடி, ஓலாஃபிற்கு சத்யன் என மிகச் சரியான குரல் தேர்வு. படம் முழுக்க பாடல்கள் இருக்கும் ஒரு படத்துக்கு ஸ்ருதி ஹாசனின் குரல் ஏகப் பொருத்தம். அதன் பிறகு அக்காவிற்கு உறுதுணையாக பதட்டத்துடன் காணப்படும் ஆனாவிற்கு டிடியின் குரலும் அதில் அவர் காட்டும் எமோஷன்ஸும் அந்த வேடத்துக்கு சரியாக பொருந்தியிருந்தது.
இதன் அனைத்திற்கும் மேலாக ஓலாஃபிற்கு சத்யன் குரல் தான் ஆகச் சிறப்பு. ஓலாஃப் செய்யும் குறும்புகளுக்கு ஏற்ப சத்யனின் வெகுளித்தனமான குரலை கேட்கும் போது அட்டகாசமாக இருக்கிறது. அடுத்த என்ன நடக்க போகிறது என்பதை நம்மால் கணிக்க முடியாத திரைக்கதை தான் படத்தை சுவாரஸியப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள் Jennifer Lee மற்றும் Chris Buck.
படம் முழுக்க இருக்கும் மேஜிக் குதிரை, நெருப்பு எரிந்த படி இருக்கும் தவளை உள்ளிட்ட ஃபேண்டசியான அம்சங்கள் நம்மை எல்சா, ஆனா குழுவினருடன் மாய பனிக்காட்டுக்கு நம்மையும் அழைத்து செல்கிறது. ஆனாவிடம் காதலை கிறிஸ்டோஃப் சொல்ல நினைக்கும் போதெல்லாம் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு முடியாமல் போகும் காட்சிகள் சிரிப்புக்கு கியாராண்டி.
மேலும், முதல் பாகத்தில் என்ன நடந்தது என்ற கதைச் சுருக்கத்தை ஓலாஃப் தனக்கே உரிய குறும்புத் தனங்களுடன் சொல்லி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். தண்ணீர் குதிரையுடன் எல்சா சண்டையிடும் காட்சிகளில் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்காக படக்குழு எடுத்துக்கொண்ட மெனக்கெடல் தெரிந்தது. கிரிஸ்டோஃப் பெக்கின் இசை காட்சிகளின் அழுத்தத்தை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்துகிறது. எடிட்டர் Jeff Draheim's காட்சிகளை சரியான விகிதத்தில் பொருத்தி படத்தை விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறார்.
டிஸ்னிக்கே உரிய அனிமேஷன் படங்களை போலவே மாய உலகம், அசாதாரண சாகச காட்சிகள், சுவாரஸிய திருப்பங்கள் என ஒரு மிகச் சிறப்பான காட்சி அனுபவம் இந்த படத்திலும் தொடர்கிறது. தமிழ் வெர்ஷன் பார்க்கும் போது கதையின் நடுவே வரும் மொழி பெயர்க்கப்பட்ட பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது கேள்விக்குறி. அதைத் தவிர்த்து விட்டால், குழந்தைங்களுக்கு பிடிக்கும் படி அமைந்திருக்கிறது திரைக்கதை.