சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதவ் மீடியா தயாரித்துள்ள இத்திரைப்படம் பொங்கல் ரீலீஸாக நேரடியாக தியேட்டரில் இன்று வெளியாகியுள்ளது.
பாரதிராஜா வாரிசுகள் எல்லாம் வெளியூர்களில் செட்டில் ஆகி இருக்க, அங்கு இருந்து அவரை பார்த்து கொள்கிறார் சிம்பு. கொரோனா வைரஸ் சூழலால் சொந்தங்கள் அனைவரும் ஒன்று சேர, கூடவே அவர்களை அழிக்க காத்திருந்த பகையும் துளிர் விடுகிறது. குடும்பத்திற்கே அரணாய் இருக்கும் சிம்பு, அழிக்க துடிக்கும் பகையை எப்படி முறியடிக்கிறார்.? ஈஸ்வரனாக அவர்களை எப்படி காக்கிறார்.? எதிரிகளை அழிக்கிறார்.? என்பதே ஈஸ்வரன் படத்தின் மீதிக்கதை.
ஈஸ்வரனாக சிம்பு கம்-பேக் கொடுத்து ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் கொடுக்கிறார். விரல் சொடுக்கி துள்ளல் போடுவதாகட்டும், ஆக்ஷன் காட்சிகளில் ஆக்கிரோஷம் காட்டுவதாகட்டும், வின்டேஜ் சிம்புவின் சேட்டைகள் ஈஸ்வரனுக்கு மேலும் பலம் கூட்டுகிறது. நடனத்திலும் எப்போதும் அய்யா கிங்தான் என்பதை மீண்டும் ஒருமுறை ஈஸ்வரனில் நிருபிக்கிறார்.
நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா என இரண்டு கதாநாயகிகள். நந்திதா ஸ்வேதா கொஞ்சம் அடக்கி வாசக்க, நிதி அகர்வால் அழகாக வந்து போகிறார். சிம்புவை சீண்டும் முறை பெண்ணாகவும் ஆங்காங்கே கவர்கிறார் நிதி. பாரதிராஜா அந்த மண்ணுக்கே உரிய இயல்போடு நடித்திருக்கிறார். காமெடி நடிகர் பால சரவணனுக்கு நகைச்சுவையை தாண்டி எமோஷனலாகவும் ஸ்கோர் செய்யும் ரோல்.. அதை நிறைவாக செய்திருக்கிறார்.
திருவின் கேமராவும் ஆண்டனியின் எடிட்டிங்கும் கதைக்கு தேவையான அளவில் கச்சிதமாக அமைகிறது. இசையமைப்பாளர் தமன் தனது பின்னணி இசையால் ஈஸ்வரனுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார். அதே நேரத்தில் பாடல்களிலும் துள்ளல் காட்டி கவர வைக்கிறார்.
காம்பேக்ட் சைஸ் கதையை எடுத்து கொண்டு அதில் முடிந்தளவு சுவாரஸ்யம் கூட்டி வெற்றி பெறுகிறார் இயக்குநர் சுசீந்திரன். அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களின் மூலம் கதையை சொல்லிய விதத்தில் ரசிக்க வைக்கிறார். சிம்புவின் ரசிகர்களுக்காக மட்டுமல்லாமல், பொங்கலுக்கு பக்கா கிராமிய குடும்பத்து கதையை கொடுக்க முழுவதுமாக முயற்சித்திருக்கிறார்.
ஆனால் அதே நேரத்தில் ஈஸ்வரனின் அடிநாதமாக இருந்த முன் பகை ஆழமில்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்தோடு ஒன்றவிடாமல் செய்கிறது. காதல் காட்சிகளும், குடும்பத்து உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளும் நேர்த்தியாக சொல்லப்படாமல், மேம்போக்காக கையாளப்பட்டிருப்பதும் படத்திற்கு மைனஸாக அமைகிறது.
வில்லன் கதாபாத்திரமும் பவர்ஃபுல்லாக இல்லாமல் இருப்பது தொய்வை ஏற்படுத்தே, அதுவே படத்தின் க்ளைமாக்ஸை வீக் ஆக்குகிறது.