கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸின் கூட்டு தயாரிப்பில்,நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் நேரடியாக திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் டாக்டர்.
அப்பாவி சிறுமிகளை கடத்தி விற்கும் ஹியூமன் ட்ராபிக்கிங் நெட்வொர்க் நடத்தி வருபவர் வினய். இந்த நெட்வொர்க்கை பிடிக்க ஒரு டாக்டர் களமிறங்கினால் என்ன நடக்கும் என்பதே கதைக்கரு.
'டாக்டர்' வருணாக சிவகார்த்திகேயன் முற்றிலும் புதியதொரு அவதாரம் எடுத்துள்ளார். அலட்டல் இல்லாத உடல்மொழி, அளவான வசனங்கள் என தனது வழக்கமான பாணியை உடைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சிவா.
பிரியங்கா, அர்ச்சனா, இளவரசு, அருண் அலக்ஸாண்டர் உள்ளிட்டோர் கதைக்கு பலமாக இருப்பதோடு காமெடிக்கும் கை கொடுக்கிறார்கள். வில்லனாக வினய் கச்சிதம்.
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா கூட்டனி காமெடி கலாட்டா நடத்தி க்ளாப்ஸ் அள்ளுகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மை மறந்து சிரிக்க வைப்பதற்கு கேரண்டி கொடுக்கிறார்கள்.
படம் நெடுக, தன் பின்னணி இசையாலும் பாடல்களாலும் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் கொடுத்துள்ளார் அனிருத். கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஃப்ரேம்களால் காட்சிகளை செதுக்கியுள்ளார் விஜய் கார்த்திக் கண்ணன்.
முன்பாக 'கோலமாவு கோகிலா'வில் ப்ளாக் காமெடி ஜானரில் சிக்சர் அடித்த நெல்சன் டாக்டரில் அடுத்த சிக்சர் அடித்துள்ளார். சீரியஸான நேரங்களில் அவரின் ஹியூமர் ரசிக்க வைக்கிறது. நிச்சயம் நெல்சனின் திரைமொழி பேசப்படும்.
லாஜிக்கை கண்டுகொள்ளாமல் பயணிக்கும் திரைக்கதையும் சட்டென முடியும் க்ளைமாக்ஸும் மைனஸ்.
மக்களின் ரசனைக்கு தேவையான 'ஆபரேஷனை' சிறப்பாக செய்துள்ளார் 'டாக்டர்'.