கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வெவ்வேறு காலங்களில் பிரவேசிக்கும் டைம் டிராவல் படம்தான் டிக்கிலோனா. இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், சோல்ஜர் பேக்டரி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் செப் 10-ஆம் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.
சந்தானம் டைமுக்குள் டிராவல் ஆனாலும், மொத்தக் கதையும் சந்தானத்தின் டைமிங் கவுண்டர்களுக்குள் டிராவல் ஆகிறது. திருமண நிகழ்வு, குடும்ப உறவுகள், மனைவி மத்தியில் எதார்த்த வாழ்வியல் அனுபவ கவுண்டர்கள் க்ளாப்ஸ் அள்ளுகிறது. இரண்டு ஹீரோயின்களும் வெரைட்டி காட்டி கதைக்கு சப்போர்ட் செய்கின்றனர். ஆனந்த் ராஜ், முனீஷ்காந்த் காம்போ வேற லெவலில் இருந்தாலும் நன்றாக ஸ்கோர் பண்ணக்கூடிய இவர்களுக்கு, ஸ்கோப் இருந்தும் கதாபாத்திரத்தை கச்சிதமாக ஸ்கெட்ச் பண்ணியிருக்கலாமே பாஸ்? வழக்கம் போல் ஷாரா பின்னுகிறார்.
ஒரு காட்சிக்கு வந்தாலும் தல தோனியை நினைவுபடுத்தி சீரியஸ் மோட்டிவேஷனல் பஞ்ச் அடிக்கும் ஹர்பஜன் சிங் நெஞ்சில் நிற்கிறார். மனநல மருத்துவமனையில் வரும் மொட்டை ராஜேந்திரன் மற்றும் லொள்ளு சபா மாறன் இருவரும் அல்டிமேட். அதிலும் லொள்ளு சபா மாறனின் ‘நீ இன்னும் என்ன பைத்தியக்காரன்னு தான் நெனைச்சுட்டு இருக்கல்ல’ வசனம் அத்தனை முறை வந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நிழல்கள் ரவியின் கேஜிஎஃப் பில்டப் பேச்சும் இறுதி ட்விஸ்ட்டும் ஆசம்!! (கேஜிஎஃப் படத்தின் நிஜ கதைசொல்லி கேரக்டருக்கு குரல் கொடுத்தவர்)
கடந்த கால சந்தானத்திடம் எதிர்கால சந்தானம் ‘உங்க வீட்ல உனக்கு மரியாதையே சொல்லித் தரலயா?’ என தன்னிடமே பேசும்போது, 2வது நபரிடம் பேசுவது போல் பேசுவது முரண்பாடாக உள்ளது. யோகிபாபு ஏன் எலக்ட்ரிக் ஷாக் அடித்ததும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகிறார்.? ஐசக் நியூட்டனிடம் போன் பேசுகிறார்.? அவர் சுயநினைவுடன் தான் இருக்கிறாரா? மூத்த சயிண்டிஸ்ட் அருண் அலெக்ஸாண்டருக்கு மட்டும் மறந்து போகிறது. ஆனால் யோகிபாபுவுக்கு மட்டும் எப்படி எல்லாம் நினைவிருக்கிறது? எனும் கேள்வி எழுகிறது.
சந்தானத்தை திருமணம் செய்யும் பணக்கார பெண்ணான ஷிரின், ‘யூடியூப்’ பிரஷாந்துடன் அடிக்கும் அந்த மிகையான டிக்டாக் கூத்தெல்லாம் கொஞ்சம் அதீத அலுப்பை தருவதை தவிர்க்க முடிவதில்லை. சந்தானம் - ஷிரின் இடையே உண்டாகும் முரண், சந்தானத்துக்கும் அனகாவுக்கும் இடையில் இருக்கும் அளவுக்கு இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். அவ்வளவு பகட்டாக திருமணம் செய்யும் சந்தானம் அடுத்த 7 வருடங்களில் ஈபியில் லைன் மேன் ஆகும் அளவுக்கு பொருளாதார சரிவு ஏற்படுவது நம்பும்படியாக இல்லை.
ஆர்வியின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை முழு கதையின் காமெடிகளுக்கு பெரிதாக உதவவில்லை என்றாலும் காதல் போர்ஷன்களில் கனம் கூட்டுகிறது. அதிலும் பிற்பாதியில் யுவன் பாடும் அந்த காதல் ஏக்க பாடல் சர்ப்ரைஸ். காமெடி - சயின்ஸ் ஃபிக்ஷன் - ரொமான்ஸ் என 3 ஜானர்களை சரியான கலவையில் சேர்த்துள்ளது ஜோமின் செய்துள்ள எடிட்டிங்.
பேய் படங்களை சீரியஸாக எடுத்து வந்த இண்டஸ்ட்ரியில் தில்லுக்கு துட்டு பட வரிசைகள் மூலம் தட்டித் தூக்கிய சந்தானத்தின் டீம், அடுத்ததாக திரைத்துறையில் உலாவும் இந்த டைம் மெஷின் கான்செப்டையும் தங்களுக்கே உண்டான கலாய் ஃபார்முலாவில் கையில் எடுத்து கலகலப்பு செய்துள்ளனர். படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் லாஜிக், எதார்த்தம் எல்லாத்தையும் மறந்து குடும்பத்துடன் சிரித்திருப்பார்கள்.