ஹரிஷ் கல்யாண், விவேக், தான்யா ஹோப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தாராள பிரபு'. கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஃபுட்பால் பிளேயரான ஹரிஷ் கல்யாண் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்காக முயற்சித்து கொண்டிருக்கிறார். அப்போது மருத்துவரான விவேக் மூலம் ஸ்பெர்ம் டோனராகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பை ஏற்கும் ஹரிஷிற்கு அதனால் நிகழும் விளைவுகளே படத்தின் கதை.
ஃபுட்பால் பிளேயராக ஹரிஷ் கல்யாண் எப்பொழுதும் ஒரு வித எனர்ஜியுடன் இருக்கும் கேரக்டர். அதனை டபுள் எனர்ஜியுடன் சிறப்பாக செய்திருக்கிறார். விவேக் இந்த படத்தின் ஆல் ரவுண்டர் எனலாம். அந்த அளவுக்கு காமெடி, எமோஷன் என காட்சிக்கு காட்சி தனது டயலாக் டெலிவரியால் ஸ்கோர் செய்கிறார். தான்யா ஹோப் தனது வேடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நன்றாக செய்திருக்கிறார்.
குறைவான கேரக்டர்களே உள்ள இந்த படத்தில் சச்சு, அனுபமா குமார், ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் தங்கள் வேடங்களை சிறப்பாக செய்துள்ளார்கள். ஃபுட் பால், காதல் காட்சிகள் என மெதுவாகவே துவங்குகிறது. வாய்ப்பிருந்தும் காட்சிகளில் துளியும் விரசமில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். ஆனாலும் இரட்டை அர்த்த வசனங்களின் பயன்பாட்டை தவிர்த்திருக்கலாம்.
சமீப காலங்களில் பெருகி வரும் குழந்தையின்மை பிரச்சனையை கையாண்டிருக்கிறது இந்த படம். அதன் காரணங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே வசனங்களால் குறிப்பிட்டது சிறப்பு. சில பாடல்கள் படத்துக்கு வேகத்தடையாக இருந்தது.
பரத் ஷங்கரின் பின்னணி இசை எமோஷனல் காட்சிகளின் வீரியத்தை பார்வையாளர்களுக்கு அப்படியே நடத்தியிருக்கிறது. தனது நேர்த்தியான ஒளிப்பதிவாளர் கவர்கிறார் செல்வகுமார் எஸ்கே.
ஸ்பெர்ம் டொனேஷன் என்ற தமிழுக்கு புதுமையான விஷயத்தை முடிந்தவரை சுவாரஸியமான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். நல்லவரா கெட்டவரா என கணிக்க முடியாத விவேக்கின் பாத்திர படைப்பு படத்தின் பரபரப்புக்கு உதவியிருக்கிறது.
இரண்டாம் பாதியில் முக்கிய திருப்பம் எதிர்பார்க்காத ஒன்று. குழந்தையின்மை குறைபாட்டை சுற்றி எவ்வாறு வணிகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறது இந்த தாராள பிரபு.