கார்த்தி, ரகுல் பிரீத் சிங், ஆர்.ஜே விக்னேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் 'தேவ்'. இந்த படத்தை புதுமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியிருக்கிறார்.
அட்வெஞ்சர் என மனம் போன போக்கில் வாழும் நாயகனும், தன் தாய்க்கு நிகழ்ந்த கசப்பான அனுபவத்தால் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கும் நாயகியும் காதலித்துக் கொண்டால் நிகழும் மாற்றங்களே படத்தின் கதை.
தனது துறுதுரறு நடிப்பால் நாயகன் வேடத்துக்கு தான் சரியான தேர்வு என்பதை கார்த்தி நிரூபிக்கிறார். லட்சியம் மிகுந்த பெண்ணாக, கண்களில் கர்வத்துடன் வலம் வரும் நாயகியாக ரகுல் அந்த வேடத்துக்கு பொருந்துகிறார்.
படத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ் என படத்தில் குறைவான கேரக்டர்களே உள்ளனர். இதில் ஆர்.ஜே. விக்னேஷிற்கு மட்டும் படம் முழுக்க வரும் முக்கிய வேடம். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சீரியஸான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் அவரது காமெடிக்கு பெரும்பாலான இடங்களில் சிரிப்பு வரவில்லை.
படத்தின் பிளஸ் வேல்ராஜின் ஒளிப்பதிவு. அட்வெஞ்சர், காதல் படங்களுக்கான கலர்புல்லான காட்சிகளுக்கு அவர் கச்சிதமாக துணை புரிந்திருக்கிறார். அந்த காட்சிகளுக்கு உயிர் கொடுக்க முயற்சித்திக்கிறது ஹாரிஸின் இசை. ஆனால் பாடல்கள் சரியான இடத்தில் இடம் பெறாதது மைனஸ்.
காதல் தான் படத்தின் அடிப்படையான அம்சம். ஆனால் கார்த்தி, ரகுலுக்கு இடையே நிகழும் எந்த காட்சிகளும் சுவாரசியமானதாக இல்லை. மேலும் எளிதில் கணிக்கக் கூடிய திரைக்கதை படத்தின் சுவாரசியத்தை மேலும் குறைக்கிறது.
ஆனால் ஒரு சில காதல் காட்சிகள், பாடல்கள், அதனை படமாக்கிய விதம் என படத்தில் ரசிக்கக்கூடிய சில விஷயங்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன.