யோகி பாபு முதன்மை வேடத்தில் நடித்து ஓடிடி தளமான ஜீ5-ல் வெளியாகியிருக்கும் படம் 'காக்டெய்ல்'. பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்க, ரா.விஜய முருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அப்பார்ட்மென்ட் ஒன்றில் யோகி பாபு அண்ட் கோ குடித்து விட்டு மறுநாள் எழுந்து பார்க்கையில் பெண் ஒருவர் இறந்து கிடக்கிறார். இன்னொரு பக்கம் ஐம்பொன் சிலை ஒன்றை கடத்த முயல்கிறார் மைம் கோபி. இரண்டு வழக்கையும் விசாரிப்பது போலீஸான சாயாஜி ஷிண்டே. பெண்ணை கொலை செய்தது யார் ?, மைம் கோபி ஐம்பொன் சிலையை கடத்தினாரா ? என்ற கேள்விகளுக்கு காமெடியாக பதில் சொல்ல முயன்றிருக்கும் படமே காக்டெய்ல்.
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சலூன் கடை நடத்தி வரும் டானாக யோகி பாபு. அவர்களது நண்பர்களாக KPY பாலா, மிதுன் மகேஷ்வரன், கவின். ஒரு காமெடி படத்துக்கு தேவையான நடிப்பை தொய்வில்லாமல் வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக KPY பாலாவின் இன்னெஸன்டான நடவடிக்களை யோகி பாபு கலாய்ப்பது என இருவரும் இணைந்து ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றனர்.
மைம் கோபியுடன் வரும் KPY குரேஷியும் ஆங்காங்கே தனது நகைச்சுவைகளால் சுவாரஸியப்படுத்துகிறார். படத்தில் சீரியஸான கேரக்டர்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு படம் முழுக்க பஞ்சமில்லாமல் காமெடி நடிகர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
குறைவான லொகேஷன்களை உள்ள படத்தில் முடிந்த அளவுக்கு தனது நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆர்.ஜே.ரவீன். இருப்பினும் பயண காட்சிகளின் மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு காமெடி படத்துக்கு தேவையான பின்னணி இசையை சரியாக வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சாய் பாஸ்கர்.
தலைப்புக்கேற்ப இரண்டு குற்ற சம்பவங்களை ஒற்றை பின்னணியில் இணைத்து காமெடியாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ரா.விஜய முருகன். கதாப்பாத்திரங்களின் அறிமுகம், படத்துக்கு சம்பந்த மில்லாத காட்சிகள் என கதைக்குள் செல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் படத்தில் காதல் போன்ற காட்சிகள் அவ்வளவு இயல்பாக இல்லாமல் நாடகத்தன்மையாக இருக்கிறது. மேலும் வீட்டில் இறந்த பெண்ணின் உடல் இருக்கும் போது யோகி பாபு காமெடி செய்துகொண்டிருப்பதனால் அவை கதையின் சுவாரஸியத்தை குறைக்கிறது.
எல்லா பிரச்சனைகளும் சட்டென சரியாகும் இறுதிக்காட்சிகளும் அவ்வளவு ஏற்றுக்கொள்ளும் படியில்லை. இப்படி குறைகள் ஒரு பக்கம் இருந்தாலும், யோகி பாபு, KPY பாலா, குரேஷியின் காமெடி ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன.