ஶ்ரீ ஷீரடி சாய் மூவிஸ் மற்றும் பிக் ப்ரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெள்ளிக்கிழமை (12.2.2021) அன்று நேரடியாக தியேட்டர்களில் வெளியாகியுள்ள திரைப்படம் C/O காதல். இத்திரைப்படத்தில் வெற்றி, தீபன், அய்ரா,மும்தாஸ் சொர்கார், கார்த்திக் ரத்னம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்கியுள்ளவர் ஹேமாம்பர் ஜஸ்தி. ஸ்வீகர் அகஸ்தி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பெரும் பாராட்டுக்களை குவித்த C/O Kancherapalem படத்தின் ரீமேக் இது.
அறியாத வயதில் வரும் பள்ளிக்காதல், பதின்ம வயதின் பருவக் காதல், முப்பது வயதில் இரு விளிம்பு நிலை மணிதர்களின் காதல், வாழ்ந்த முடித்த இருவரின் வயது கடந்த காதல் என வெவ்வேறு மணிதர்களின் கதைகளுக்குள், "காதலுக்கு வயதில்லை" என்பதை காதலோடு சொல்லும் காதல் கதைதான் இந்த கேர் ஆஃப் காதல்.!
49 வயதை நெருங்கிவிட்ட தீபன் அரசாங்க உத்யோகஸ்தர். ஆனால், இன்னும் கல்யாணம் ஆகாதபடியால், ஊர் பேச்சுக்கு ஆளாக நேர்கிறது. அவரது ஆபீஸில் வேலை செய்யும் கணவரை இழந்த சோனிய கிரிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட, அதுவே காதலாக மாறுகிறது. இதற்கிடையில் இன்னும் மூன்று காதல் கதைகளும் இழையோட, முடிவில் ஒவ்வொருவரின் காதல் கதையும் என்ன ஆனது.? இந்த வெவ்வேறு காதல் கதைகளும் பேசும் உணர்வு என்ன.? என்பதை மிக ஃபீல் குட்-ஆக கொடுக்க முயற்சித்திருக்கிறது படக்குழு.
கதையின் ஓர் கதாபாத்திரமாக வரும் வெற்றி, நடிப்பில் இன்னும் தேர்ச்சி காட்டி ரசிக்க வைக்கிறார். அவரின் வித்தியாசமான கதை தேர்வுகளில் பக்காவாக இத்திரைப்படம் செட் ஆகியிருப்பது சிறப்பு. மேலும் படத்தில் தனது அலட்டலான நடிப்பாலும், அப்பாவித்தனமான குரலாலும் லைக்ஸ் அள்ளுகிறார் தீபன். அய்ரா, கார்த்திக் ரத்னமும் கதையின் போக்கில் நம்மை கவனிக்க வைக்கிறார்கள்.
மேலும் படத்தின் கதாபாத்திரங்களாக பயணிக்கும் மும்தாஸ் சொர்கார், கிஷோர் குமார் பாலிமேரா, சோனிய கிரி ஆகியோரும் கச்சிதம். குணசேகரனின் கேமரா மதுரை வீதிகளின் அழகை அப்படியே கண்ணுக்குள் கடத்துகிறது. ஒவ்வொரு கதையையும் தனித்து தெரிய வைப்பதில் ஒளிப்பதிவாளரின் பங்கு பாராட்டுதலுக்குரியது.
ஒரிஜினல் வெர்ஷனுக்கு இசையமைத்த ஸ்வீகர் அகஸ்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் கதைக்கு ஏற்ப ரம்மியமாக ஒலிக்கிறார். பாடல்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்து கவனம் செலுத்தியிருக்கும் ஆர்ட் டைரக்ஷன் குழுவும், தொய்வில்லாமல் அளவான எடிட்டிங்கை கையாண்டிருக்கும் எடிட்டரும் டெக்னிக்கலாகவும் படத்துக்கு கனம் கூட்டுகின்றனர்.
காதல் என்பது ஒற்றை உணர்வாயினும் அது வெவ்வேறு மணிதர்களின் வாழ்க்கையில் என்னவான விளைவுகளை ஏற்படுத்தி செல்கிறது என்பது மிக யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு. அதை சரியாக செய்து நம்மை கவர்கிறார் இயக்குநர். ஜாதி, மதம், கடவுள் குறித்து நம் சமூகத்தில் மிக சாதாரணமாக உரையாடப்படும் வார்த்தைகளை கூட, தயக்கம் காட்டாமல் உள்ளதை உள்ளபடியே மிக தைரியமாக பேசியதற்கு பாராட்டுக்கள்.
படத்தில் உள்ள பலர் நமக்கு பரிட்சையமில்லாத முகங்களாக இருந்த போதிலும், கதையின் ஓட்டத்தில் அவர்களின் நடிப்பை பார்வையாளர்களுக்கு கடத்தியதில், இயக்குநர் ஹேமாம்பர் ஜஸ்தி நம்பிக்கை அளிக்கிறார். குறிப்பாக வெற்றி - மும்தாஸ் இடையேயான காதல் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு. அதை கொஞ்சமும் நேர்த்தி பிசகாமல் கையாண்டிருக்கிறார். அழகு!
படத்தின் பல்வேறு காட்சிகள் க்ளாப்ஸை வாங்கினாலும், அதை இரண்டாம் பாதியில்தான் காண முடிகிறது. முதல்பாதியில் படத்தின் களத்தை செட் செய்வதிலேயே அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக தோன்றுகிறது. அதுவே லேசான தொய்வையும் கொடுத்து விடுகிறது. ஒவ்வொரு பகுதியின் காதலும் தெளிவாக உணர்த்தப்பட்ட வேளையில், அதன் முடிவுகளில் இருந்து எமோஷன்கள் சரியாக சொல்லப்படாதது வருத்தமளிக்கிறது.