இறந்து போன அப்பா கற்றுத்தந்த ஃபுட்பாலின் தடம் பதிக்க ஆசைப்படுகிறான் ஜோன்ஸ். ஆனால் ஒரு நாள் அவன் அப்பாவின் மரணம் ஒரு கொலை என தெரிய வருகிறது.
அப்பாவை கொன்ற ரவுடியை பழிவாங்க திட்டமிடும் அவன் இறுதியில் கொலைகாரன் ஆனானா அல்லது ஃபுட்பால் சாம்பியன் ஆனானா என்பதே சாம்பியனின் கதை.
வடசென்னையில் வாழும் திறமையான ஃபுட் பால் வீரர்களையும், அவர்கள் எப்படி திசைமாற்றப் படுகிறார்கள் என்பதையும் ஒரு நல்ல படைப்பின் மூலம் தந்திருக்கிறார் சுசீந்திரன்.
ஜோன்சாக நடிக்கும் விஷ்வாவின் இறுக்கமான உடல்வாகு ஃபுட்பால் பிளேயர் கதாப்பாத்திரத்துக்கு சரியாக பொருந்தி வருகிறது. ஆனால் எப்போதும் ஒரே முகபாவத்துடன் இருப்பதை தவிர்த்திருக்கலாம். நாயகியாக வரும் மிருநாளினிக்கு அவ்வளவாக வேலை இல்லை.
தந்தை கதாப்பாத்திரம் மூலம் 'கம்-பேக்' கொடுத்திருக்கும் மனோஜ் பாசமுள்ள அப்பாவாக நம் கண்ணில் நிற்கிறார். அவர் இறக்கும் காட்சி அதிர்ச்சியளிக்கிறது.
விஷ்வாவை இன்னொரு அப்பா போலவே பார்த்துக் கொள்ளும் கோச் நரேன் இறுதியில் அவனுக்காக செய்யும் தியாகம் நெகிழ செய்கிறது. வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் ஸ்டண்ட் சிவா மிரட்டி இருக்கிறார்.
வட சென்னையில் இருந்து வரும் படித்த இளைஞர்கள் மீது இந்த சமூகம் எவ்வாறு முத்திரை குத்தியிருக்கிறது என்பது படத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
ஆரோல் கரோலியில் இசை படமெங்கும் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. படத்தின் சிறப்பான சவுண்ட் டிசைனும் பாராட்டிற்குரியது. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில் படமெங்கும் Pull focus.
புதிய காட்சிகள் அதிகம் இல்லாவிட்டாலும் கதை எடுத்துக்கொண்ட களத்தில் பிசிறில்லாமல் பயணிப்பதால் சாம்பியன் ஜெய்க்கிறான்.