சந்தானத்தின் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் பிஸ்கோத். தாரா அலிஷா, சௌகார் ஜானகி, மொட்ட ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொல்லு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரொனா வைரஸ் காரணத்தால், மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் இப்போது திறக்கப்பட்டிருக்க, நேரடியாக தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளது.
சந்தானத்தின் அப்பாவான ஆடுகளம் நரேனும் ஆனந்த்ராஜும் மேஜிக் பிஸ்கட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்குகின்றனர். என்றாவது ஒருநாள் தனது மகன் ராஜா (சந்தானம்), இந்த பிஸ்கட் கம்பனியின் ஜெனரல் மேனஜர் ஆகிவிடுவான் என்ற நம்பிக்கையோடு ஆடுகளம் நரேன் இறந்து போக., அவர் எதிர்ப்பார்த்தபடி ராஜா ஜி.எம் ஆனாரா..? அதில் உண்டாகும் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்.? என்பதே இப்படத்தின் கதை.
ராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சந்தானம். அதே நக்கலான பேச்சு, தெறிக்கும் கவுண்டர்கள் என சிறப்பாக செய்திருக்கிறார். ஆர்.கண்ணன் படங்களில் தனது காமெடியால் கலக்கிய சந்தானத்திற்கு, அவருடனான வேவ்லென்த் பக்காவாக செட் ஆகிறது. கூடவே மொட்ட ராஜேந்திரன், லொல்லு சபா மனோகர் என தனது பலமான கூட்டணியுடன் காமெடி வெடி போட்டு தள்ளுகிறார்.
மூத்த நடிகை சௌகார் ஜானகி வரும் காட்சிகளில் எல்லாம், கதை சொல்லும் பாட்டியாகவே மாறி அசத்துகிறார். அவர் காட்டும் சின்ன சின்ன குழந்தைத்தனமான முகபாவனைகளும் ரசிக்க வைக்கிறது. ஹீரோயினாக தாரா அலிஷா தேவையான இடங்களில் மட்டுமே வந்து போகிறார். மேலும் படத்தின் நகைச்சுவை தூண்களாக மொட்ட ராஜேந்திரன், மனோகர், ஆனந்த்ராஜ் என அனைவரும் முடிந்தளவு காமெடிக்கு கை கொடுக்கின்றனர்.
ரதன் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் பெரிய அளவில் மனதில் நிற்காமல் போவது சற்றே வருத்தமளிக்கிறது. கேமரா, எடிட்டிங், ஆர்ட் டைரக்ஷன் என மற்ற டெக்னிஷியன்களும் கதைக்கு தேவையானவற்றை சரியாக செய்து கொடுத்திருக்கிறார்கள். காமெடி காட்சிகளில் அவ்வப்போது வரும் டயலாக் பன்ச்கள் கைத்தட்டல்களை அள்ளுகிறது.
சிறிய கதையை எடுத்து கொண்டு, பாகுபலி முதல் 300 பருத்திவீரர்கள் வரை, ஸ்பூஃப் செய்து காமெடி அட்டகாசம் செய்திருப்பது ரசிக்க வைக்கிறது. படத்தில் இடம்பெற்ற 80-ஸ் பகுதியும் நகைச்சுவைக்கு கேரண்டியாக அமைகிறது. ஆனால், திரைக்கதையில் முன்பே சொல்லப்பட்ட விஷயங்கள், பிறகு காட்சியாக வரும்போது படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்துவிடுகிறது. மேலும் இதே பாணியில் சந்தானத்தின் படங்களை பார்த்து வருவதால், கொஞ்சம் சலிப்பும் ஏற்படவே செய்கிறது.
குறைவான நேர அளவில் படம் இருப்பினும், இரண்டாம் பாதியில் லேசான தொய்வு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. காமெடி காட்சிகளுக்கு காட்டிய உழைப்பை கொஞ்சம் திரைக்கதை அமைப்பிலும் காட்டியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட சூழலில், கொஞ்சம் ரிலாக்ஸாக சிரித்துவிட்டு வர ஆங்காங்கே இடம் கொடுக்கிறது பிஸ்கோத்.