எம்10 புரொடக்க்ஷன் சார்பாக எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் விக்ராந்த் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் படம் பக்ரீத். என்ன கஷ்டம் நேர்ந்தாலும் தனது நிலத்தில் விவாசயம் மட்டுமே செய்வது பிழைப்பது என்று குறிக்கோளாக இருக்கிறார் விக்ராந்த்.
விவாசயத்திற்காக கடன் கேட்டு ஒரு இஸ்லாமியர் வீட்டுக்கு செல்கிறார். அங்கே பக்ரீத்திற்காக அழைத்து வரப்படும் குட்டி ஒட்டகம் ஒன்றை பிரியப்பட்டு தனது வீட்டுக்கு அழைத்து வந்து வளர்க்கிறார் விக்ராந்த் . அவரது வீட்டில் உணவு சூழல் உள்ளிட்டவைகள் ஒத்துக்கொள்ளாமல் துன்பப்படுகிறது ஒட்டகம். மருத்துவர் சொல்வதை கேட்டு ஒட்டகத்தை ராஜஸ்தான் அழைத்துச்செல்ல விக்ராந்த் செய்யும் போராட்டங்களும் பிரயத்தனங்களுமே இந்தப்படத்தின் கதை.
ஹீரோவாக விதார்த் நடை, உடை என ஒரு அசல் கிராமத்து இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். மொத்த படத்தையும் தனது யதார்த்த நடிப்பால் தோளில் சுமந்திருக்கிறார். அவருக்கு மனைவியாக வசுந்தரா. முடிந்தவரை தன் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
அந்நியப்பொருட்கள் தன் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது என கடலை மிட்டாய் உள்ளிட்ட நம் நாட்டு தின்பண்டங்களை வாங்கித் தருகிறார் விக்ராந்த். தன் ஒட்டகத்துக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் உணவும் சூழலும் ஒத்துக்கொள்ளாது என்பதை அறிந்து தனது அறியாமையை நினைத்து கலங்கும் இடம் உணர்வுப்பூர்வமாக இருந்தது. ஒரு விவாசய குடும்பத்தின் வாழ்வியலை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
தனது இசையின் மூலம் இரண்டாம் பாதியில் கூடுதல் பரபரப்பு சேர்த்திருக்கிறார் இசயமைப்பாளர் டி.இமான். சித் ஸ்ரீராமின் குரலில் ஆலங் குருவிகளாக பாடல் இனிமை. தமிழகம் வட இந்தியா என மாறுபட்ட நில அமைப்புகளை நேர்த்தியுடன் பதிவு செய்திருக்கிறது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜெகதீசன் திபுவின் கேமரா.
இரண்டாம் பாதியில் மஹாராஷ்டிரா முதல் ராஜஸ்தான் வரை நடந்தே அழைத்து செல்லும் போது விக்ராந்திற்கு ஏற்படும் பிரச்சனைகளில் உள்ள செயற்கை தன்மையை தவிர்த்திருக்கலாம். இரண்டாம் பாதியில் ஆங்காங்கே காட்சிகளில் உள்ள லாஜிக் குறைபாடுகளை சரிசெய்திருக்கலாம். இருப்பினும் விலங்குகளை நேசிக்கும் ஒரு விவாசயக்குடும்பத்தின் வாழ்வை மிக யதார்த்தமாக பதிவு செய்திருந்த.விதத்தில் கவனம் ஈர்க்கிறது இந்த பக்ரீத்