முதிர் பருவத்தில், தங்கை குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார் கருப்பசாமி. எதிர்பாராத ஒரு விபத்து, அவரை படுத்தப்படுக்கையாக்கி மீண்டும் கஞ்சனான தன் மகனிடமே அனுப்பி வைக்கிறது. அங்கு சென்ற சிறிது நாட்களில் கருப்பசாமி இறந்துபோகிறார். ஆனால், அவர் சாவில் இருக்கும் மர்மத்தை விசாரிக்கும்போது பல அதிர்ச்சியான விஷயங்கள் வெளிப்படுகின்றன.
தமிழ் சினிமாவின் டெம்ப்லேட்டை சீண்டிப்பார்க்கும் படைப்புகள் அவ்வப்போது தலைகாட்டும் ஆரோக்கியமான போக்கு உருவாகியிருக்கிறது. நிஜவாழ்வின் சம்பவங்களை கேமராவில் பதிவாக்கியது போன்ற யதார்த்தத்தை சாத்தியமாக்கியிருக்கிறது ’பாரம்’. ஒரு வலிமையான கதையை துளி கூட நாடகத்தன்மை சிறிதும் இன்றி கையாண்டிருக்கிறார் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி.
பெற்ற மகனுக்கு வீட்டை எழுதி கொடுத்துவிட்டு, சொந்தங்களுக்கு பாரமாகாமல் வாட்ச்மேன் பணியில் ஈடுபடும் கருப்பசாமியாக ராஜு. வாழ்வில் நாம் கடந்துவிடும் எந்த ஒரு முதியவரையும் நினைவூட்டிவிடும் யதார்த்த மனிதராக வருகிறார். அவர் ஒரு காட்சியில் தாங்க முடியாத வலியில் அலறும்போது மனம் பதறுகிறது.
சாந்தமே உருவான அவருக்கு நேர் எதிரான மகனாக முத்துக்குமார். ஒரு பெரிய கோபத்தின் முந்தைய கணத்தில் இருப்பவர் போன்ற பாவனையோடு அவர் இயல்பாக பைக்கை முறுக்கினாலே பதைபதைப்பு உண்டாகிறது. கருப்பசாமியை தந்தையாகவே பாவிக்கும் மருமகனாக வரும் சண்முகம் மறக்க முடியாத கதாப்பாத்திரம்.
’கதை என்பது வாழ்வின் உருவகம்’ (Story is metaphor for life) என்கிறார் ஹாலிவுட்டின் பல தலைசிறந்த திரைக்கதாசிரியர்களை உருவாக்கிய ராபர்ட் மெக்கி (Robert Mckee). ஒரு கதை அல்லது திரைக்கதை எழுதப்படும் கணத்தில் நாடகத்தனத்தை அடைந்து விடுகிறது; நம் பேச்சு மொழி காகிதத்தில் நேர்த்தியையும் ஒழுங்கையும் நாடுவது போல. நாம் ஒன்றும் திரைப்படங்களில் வருவதுபோல் அன்றாட வாழ்வில் குழறாமல் வசனம் பேசிக்கொண்டில்லை தானே.
திரைவசனங்கள் திரும்பக்கூறலை (repetition), இடற்பாடுகளை தவிர்க்கும் போக்கை இயல்பாக கொண்டிருக்கிறது. வழக்கமான சினிமா போக்கு இது தான்; ஹாலிவுட்டும் விதிவிலக்கல்ல. ஆனால், ’பாரம்’ படத்தின் நடிப்பில், ஒளிப்பதிவில், எடிட்டிங்கில் தீர்க்கமான Rawness எனப்படும் வெகு இயல்பானத தன்மை தெரிகிறது. அந்த இயல்புத் தன்மை வெகுஜன பார்வையாளர்களுக்கு சற்று அந்நியமாகத் தெரியலாம்.
இசை முடிந்தவரை தவிர்க்கப்பட்டு சூழலின் ஓசையும், எதிரெதிர் over the sholder shotகள் தவிர்க்கப்பட்டு, இயல்பான உரையாடல் காட்சியும் நிஜத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் 'தலைக்கூத்தல்' பற்றிய விளக்கக் காட்சிகள் மட்டும் டாக்குமென்ட்ரி பார்க்கும் உணர்வை தருகிறது.
எழுத்தாளரும், திரைக்கதாசிரியருமான எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு மேடையில் ‘எல்லாத்திரைப்படங்களும் இளைஞர்களின் கதைகளையே பேசுகிறது. ஏன் முதியவர்களுக்கு கதை இல்லையா. அவர்கள் கதைகளை யாரும் படமாக்க மாட்டார்களா?’ என்று கேட்டிருந்தார். ’சில்லுக்கருப்பட்டி’, ’பாரம்’ இந்த வழிவழியான போக்கை கட்டுடைத்திருக்கிறது.
’தலைக்கூத்தல்’ நவீன மனங்களில் இந்த அளவு ஆட்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், இதனை ஒரு மனிதமற்ற செயலாக பாராமல் மரபாக கருதுபவர்கள் மீதான சாட்டையடி ‘பாரம்’. இதே வகையில் உடன்கட்டை ஏறல் கூட காதலின் பொருட்டான செயல் என்றே சமகால திரைப்படங்கள் romanticize செய்து வருகின்றன.
தீயில் பாய ஓட்டம்பிடிக்கும் பெண்களை அழகுற காட்சிப்படுத்தும் திரைப்படங்கள் யதார்த்தத்தில் ‘ஐயோ நான் குதிக்க மாட்டேன்’ என்று சொல்லும் ஒரு பெண்ணையாவது சித்தரித்ததா தெரியவில்லை. இத்தகையை சூழலுக்கிடையில் வெகுஜனம் ‘அவார்ட் படம்’ என்று மெத்தனமாக புறந்தள்ளும் அழகியலை ஒரு அழுத்தமான கதையோடு கையாண்டதில் ஜெயித்திருக்கிறார் பிரியா கிருஷ்ணசாமி.