வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், டீஜே, கென், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அசுரன். வெற்றி மாறன் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
கொலைபழியில் மாட்டிக் கொள்ளும் தன் மகனை எப்படி தனுஷ் அசுரனாக மாறி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. சிவசாமி என்கிற பொறுப்பான குடும்பத் தலைவனாகவும், ஆக்ரோஷமான இளைஞனாக இரண்டு பரிணாமங்களையும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் தனுஷ். அவரது மனைவியாக தன் குழந்தைகள் தான் உலகம் என கிராமத்து அம்மாவை கண் முன் நிறுத்துகிறார் மஞ்சு வாரியர். தனுஷ் கலங்கி நிற்கும் இடங்களில் எல்லாம் தோள் கொடுக்கும் மச்சானாக நம்பிக்கை தருகிறார் பசுபதி.
தவறுகளை தட்டிக் கேட்க துடிக்கும் ஆக்ரோஷமான இளைஞனாக டிஜேவும், கோபத்தில் ஒரு கொலை செய்துவிட்டு விளையாட்டுத்தனம் மாறாத இளைஞனாக கென்னும் தங்கள் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். வேற்று இன மக்களை தங்களுக்கு அடிமையாக நினைக்கும் ஆதிக்க மனம் கொண்ட கிராமத்து பெரிய மனிதர்களை தங்கள் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்கள் ஆடுகளம் நரேனும், இயக்குநர் ஏ.வெங்கடேஷும்.
தனுஷின் காதலியாக வந்து வசீகரிக்கிறார் அம்மு அபிராமி. மேலும், ஆதிக்க சக்திகளுக்கு துணை போகும் போலீஸாக பாலாஜி சக்திவேல், பவன் உள்ளிட்டோர் சரியான தேர்வு. சிறிது நேரமே வந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக மனதில் பதிகிறார் பிரகாஷ் ராஜ்.
எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு ஆக்சன் காட்சிகளுடன் பரபரப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் வெற்றி மாறன் மற்றும் மணி மாறன் கூட்டணி. காடுகள், மலைகள் என மிகவும் தத்ரூபமான கட்சிகளை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இந்த படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். குறிப்பாக இடைவேளைக்கு முன்பான காட்சியில் அவரது பின்னணி இசைக்கு திரையரங்கமே கரவொலிகளால் அதிர்கிறது.
மிகவும் யதார்த்தமாகவும் அதே சினிமா தன்மையில் இருந்து விலகாமலும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்து சுவாரசியப்படுத்தியிருக்கிறார் பீட்டர் ஹெய்ன். வெறும் பழிவாங்கும் கதையாக இல்லாமல் சமூகத்தில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் அதனால் மக்கள் படும் துன்பங்களையும் தத்ரூபமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். நியாயமாகவே இருந்தாலும் தன் மகன் செய்யும் குற்றத்தை ஆதரிக்காமல் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை தனுஷ் சொல்லும் காட்சி சிறப்பு.
படத்துக்கு தேவையென்றாலும் அதிகப்படியான வன்முறை காட்சிகளை குறைத்திருக்கலாம். தொடக்க காட்சிகளில் மட்டும் நடிகர்கள் பேசும் வட்டார வழக்கு சற்று பொறுந்தாத வண்ணம் இருந்தது. சாதிய ஏற்றத்தாழ்வுகளால் ஒரு சமூகம் எவ்வாறு பாதிக்கப்டுகிறது என்பதை சுவாரஸியமாக சொன்னவிதத்தில் கவனம் ஈர்க்கிறான் இந்த அசுரன்.