சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி வெளியீடாக நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’.
தஞ்சாவூரில், சூரக்கோட்டை கிராமத் தலைவராக வரும் காளையன் தான் ரஜினி. தங்கை தங்க மீனாட்சியாக வரும் கீர்த்தி சுரேஷ் மீது ரஜினி அதீத அன்பு கொண்டிருக்கிறார். தங்கைக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்ய கனவு காணும் ரஜினிக்கு, கீர்த்தி சுரேஷ், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, வேறொருவரை திருமணம் செய்துகொண்டு கொல்கத்தாவுக்குச் சென்றுவிடுவது அதிர்ச்சி.
ஆனால் அதில் நடந்த குழப்பத்தை புரிந்துகொள்ளும் ரஜினி, கொல்கத்தா சென்று தங்கை கீர்த்தி சுரேஷின் திருமண வாழ்க்கையில் இருக்கும் நிறைய பிரச்சனைகளை மறைமுகமாக எதிர்கொள்கிறார். ஒரு அண்ணனாக, ‘காளையன்’ ரஜினி எப்படி தன் தங்கையை ஆபத்தில் இருந்து காக்கிறார் என்பதுதான் ‘அண்ணாத்த’.
முதல் பாதியில் ரஜினி - கீர்த்தி சுரேஷ் பாசம், இரண்டாம் பாதியில் அதிரடி ஆக்ஷன் என திரைக்கதை செல்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஃபேவ்ரைட் காமெடித் தனத்தையும், துள்ளலான நடனத்தையும், துடிப்பான ஃபைட்டையும், ரஜினியின் அரிதான செண்டிமெண்ட்டையும் படத்தில் ஒருசேர காண முடிகிறது. காட்சிக்கு காட்சி தமது ஸ்டைலில் கலக்குகிறார் ரஜினி. அந்த திருவிழா நேர்த்திக்கடன் காட்சியில் கலங்கவைக்கிறார்.
சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து லேடி சூப்பர் ஸ்டாரை காணும்போது மாஸாக இருக்கிறது. அதுவும் ரஜினியுடன் மீனா மற்றும் குஷ்பு என 90S ஃபேவ்ரைட் நாயகிகள் இருவரின் காம்போ செம்ம. ரஜினியின் மாமன் மகள்களாக மீனா, குஷ்பு மற்றும் கீர்த்தி சுரேஷின் முறை மாமன்களான சதீஷ், சத்யன் கலகலப்பூட்டுகின்றனர்.
கதை டேக் ஆஃப் ஆக நேரம் எடுப்பதாக தோன்றுகிறது. கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆன பின், கதைக்குள் விரைந்து செல்லாமல், ரஜினி - நயன்தாரா காதல் படலம் கொஞ்சம் சோர்வு. எனினும் இரண்டாம் பாதியில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போர்ஷன்கள் ரசிக்க வைக்கின்றன. 'பச்சைக்கிளி' சூரியின் காமெடி வசனங்கள் அங்கங்கே சிரிப்பூட்டுகிறது.
இதேபோல், படத்தில் யூகிக்கக் கூடிய மெலோடிராமா வசனங்கள். ஜெகபதி பாபு, அபிமன்யு ஆகிய வில்லன்களின் வழக்கமான கேரக்டர் ஸ்கெட்ச் ரசிக்கும்படியாய் இல்லாதது போன்று உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. ரஜினிக்கும் பிரகாஷ் ராஜ்க்குமான காட்சிகள் நெகிழ்ச்சியூட்டுகின்றன.
அனைத்து ஃபிரேமிலும் அலங்கரிக்கிறது வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு. குறிப்பாக கொல்கத்தாவில் வரும் காட்சிகள் விஸ்வாசம் படத்தின் மும்பை காட்சிகளுக்கு இணையாக ஒளிர்கின்றன. கலை இயக்குனர் மிலனின் கைவண்ணத்தில் அண்ணாத்த கலர்ஃபுல் செட். முடிந்தவரை கதைநகர்வுக்கு ஏற்ப கத்தரி போட்டிருக்கிறார் எடிட்டர் ரூபன். மனதில் நிற்கும் பாடல்கள், ஆக்ஷன் - செண்டிமெண்ட் காட்சிகளின் வலதுகரமாக படத்தை நகர்த்தும் பின்னணி இசை என கலக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான்.
மொத்தத்தில், அண்ணன் - தங்கை செண்டிமெண்ட், ஆக்ஷன் என ‘அண்ணாத்த’ கமர்ஷியல் ஃபார்முலா படமாக இருப்பினும், படம் முழுக்க ரஜினியை மட்டுமே மையமாகக் கொண்டில்லாமல், ரஜினியுடன் சேர்ந்து தன் பலமான சென்டிமென்ட் பகுதியும் இதர நடிகர்களின் பங்களிப்புடன் நன்றாக ஒர்க் அவுட் ஆக வேண்டும் என திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் சிவா!