காஷ்மோரா, ஜுங்கா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அன்பிற்கினியாள்'. கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன், ப்ரவீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளத்தில் பாராட்டுக்களை குவித்த ‘ஹெலன்’ படத்தின் ரீமேக்தான் இந்த அன்பிற்கினியாள்.
சிக்கன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலை பார்க்கிறார் அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்). அப்பாவுடன் (அருண் பாண்டியன்) பாசம் கொண்டாடும் மகளாகவும், இன்னொரு பக்கம் சார்லஸ் (ப்ரவீன்) என்பவனை விரும்பியும் வருகிறார். இதற்கிடையில் கனடா சென்று படிக்கவும் முயற்சிகள் செய்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் வேலை செய்யும் ரெஸ்டாரன்ட்டின் ஃப்ரீசர் ரூமில் மாட்டிக்கொள்ள.. அதற்கு பின் என்ன நடக்கிறது.? என்பதே மீதிக்கதை.
அன்பிற்கினியாளாக கீர்த்தி பாண்டியன். எப்போதுமே புன்னகை கொஞ்சும் முகத்தால் ரசிக்க வைக்கிறார். பக்கத்து வீட்டு பெண் போன்ற இவரின் தோற்றமும், நடிப்பும் அழகு. ஃப்ரீசர் ரூமில் மாட்டிக்கொண்டு போராடும் காட்சிகளில் கீர்த்தி பாண்டியன் கொடுத்த உழைப்பை காண முடிகிறது. நிச்சியம் அடுத்தடுத்த வாய்ப்புகள் உறுதி.
தமிழ் சினிமாவில் பக்கா ஆக்ஷன் ஸ்டார் அருண் பாண்டியனுக்கு, நீண்ட நாட்கள் கழித்து திரையில் ரசிக்கும்படியான கதாபாத்திரம். மகளுடன் கொஞ்சி விளையாடுவதிலும், அதே மகளை தேடிக் கலங்குவதிலும் அருண் பாண்டியன் நமது லைக்ஸை அள்ளுகிறார். காதலனாக நடித்திருக்கும் ப்ரவீன் ராஜ் தவிப்பையும் தேடலையும் அளவாக வெளிப்படுத்துகிறார்.
போலீஸ் எஸ்.ஐ-ஆக நடித்திருப்பவரின் உடல் மொழி ரசிக்க வைக்கிறது.. கூடவே இயக்குநர் கோகுலின் நக்கலான தோரணைகளையும் பார்க்க முடிகிறது. அதே போல ஹோட்டல் மேனஜராக நடித்திருக்கும் பூபதியின் காமெடிகள் கண்டிப்பாக தியேட்டர்களில் க்ளாப்ஸ் அள்ளும்.
மகேஷ் முத்துசாமியின் கேமரா கதையின் வேகத்தில் பயணிக்கிறது. ப்ரதீப் ராகவின் எடிட்டிங் முழு படத்தையும் தொய்வில்லாமல் கடத்த உதவுகிறது. ஜாவேத் ரியாஸின் இசையில் பின்னணி இசை பதட்டத்தையும் கூட்டுகிறது. பாடல்கள் பெரிதாக கவனத்தில் நிற்காமல் போவது வருத்தம். கோகுல் மற்றும் ஜான் மகேந்திரனின் வசனங்கள் நறுக்.
ரீமேக் படம் என்ற போதிலும், அதிலும் தனது ட்ரேட்மார்ட் நக்கலை கலந்து கட்டி அசத்தியுள்ளார் இயக்குநர் கோகுல். அதே நேரத்தில் ஒரிஜினிலில் இருந்த பதட்டத்தையும் தவிப்பையும் குறையாமல் காப்பாற்றியுள்ளார். அப்பா - மகளுக்கு இடையேயான காட்சிகள் படத்தின் பலம். அதில் நிஜத்திலேயே அப்பா - மகளான அருண்பாண்டியன் - கீர்த்தியை நடிக்க வைத்தது சிறப்பான தேர்வு.
மிகவும் குறுகிய காலத்தில் வேகமாக படமாக்கப்பட்டிருப்பது ஆங்காங்கே தெரிந்தாலும், எந்த குறையும் இன்றி அப்பா - மகள் உறவுடன் கலந்த உயிர் போராட்டமாக இப்படத்தை நேர்மையாக கொடுத்துள்ள படக்குழுவுக்கு பாராட்டுக்கள்.