மேயாத மான் படத்துக்கு பிறகு ரத்ன குமார் இயக்கியிருக்கும் படம் ஆடை. இந்த படத்தின் நாயகி அமலா பால். தைரியமான, தெளிவான சிந்தனைகள் கொண்ட பெண். ஆண்களுடன் பைக் பந்தயங்களில் ஈடுபடுவார். யாரேனும் சவால்விட்டால் அதை நிறைவேற்றாமல் ஓய மாட்டார்.
டிவி சேனல் ஒன்றில் வேலை செய்யும் அமலா பால், விவேக் பிரசன்னா உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து பிராங்க் வீடியோ செய்து வருகிறார். ஒரு நாள் அமலா பாலின் பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்கள் இணைந்து தங்களது பழைய காலி அலுவலகத்தில் மது அருந்தி கொண்டாடுகிறார்கள். விடிந்ததும் பார்த்தால் அவர் யாருமற்ற பில்டிங் ஒன்றில் நிர்வாணமாக இருக்கிறார்.
அவரது அந்த நிலமைக்கு யார் காரணம்? அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே இந்த படத்தின் கதை. இந்த படத்தில் அமலா பாலை தவிர்த்து வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிர்வாணமாக நடிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். அதை முடிந்தவரை நேர்த்தியாக செய்திருக்கிறார். படத்தின் கதை அமலா பாலை சுற்றியே நகர்ந்தாலும் விவேக் பிரசன்னா, விஜே ரம்யா ஆகியோர் படத்துக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
அமலா பாலுக்கு பிறகு கவனம் ஈர்ப்பது ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். பெரும்பாலான காட்சிகளில் நிர்வாணமாய் அமலா ஓடித்திரிந்தாலும் அதனை துளியும் ஆபசமில்லாமல் பதிவு செய்திருக்கிறார். அதற்கு பிரதீப்பின் பின்னணி இசை துணை புரிந்திருக்கிறது.
நமக்கு தெரிஞ்சவங்கள பண்ணா தான் அது பிராங்க், யாரோ ஒருத்தர பண்ணா அது நியூசன்ஸ் போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. சமூக வலை தளங்களுக்கு அடிமையாகி அதனையொட்டி சமூகப் பிரச்சனைகளை அனுகும் இளைஞர்களுக்கு இந்த படம் சவுக்கடி கொடுக்கிறது.
படத்தில் ஒரு சில நம்பகத்தன்மையற்ற காட்சிகளால் சுவாரசியம் சற்று குறைகிறது. இறுதி காட்சிகளை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம். இருப்பினும் தற்போதைய சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை நறுக்கென சொன்ன விதத்தில் இயக்குநர் ரத்ன குமார் கவனம் ஈர்க்கிறார்