விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷிணி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் '96'. இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பினை படம் தக்க வைத்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
ராம்(விஜய் சேதுபதி), ஜானு(திரிஷா) இருவரும் பள்ளி நண்பர்கள். எதிர்பாராத காரணங்களால் பள்ளிப்பருவத்திலேயே இருவரும் பிரிந்து விடுகின்றனர். மீண்டும் 22 வருடங்களுக்குப்பின் ஸ்கூல் ரீ-யூனியன் சந்திப்பில் இருவரும் சந்திக்கின்றனர். மீண்டும் சந்தித்துக் கொண்ட இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்ன காரணங்களால் இருவரும் பிரிந்தனர்? என்பதே '96' படத்தின் கதை.
விஜய் சேதுபதி, திரிஷா இருவரும் படத்தை தங்களது தோள்களில் தூக்கி சுமந்துள்ளனர். அந்த சந்திப்புக்குப் பின் இருவரும் பேசிக்கொள்வது மற்றும் ஒருவரைப் பற்றிய மற்றவரது நினைவுகள், இருவருக்கும் இடையிலான பிளாஷ்பேக் காட்சிகள் நன்றாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் வரும் ஸ்கூல் தொடர்பான காட்சிகள் நம்மை அந்த தருணத்துக்கே அழைத்து சென்று விடுகின்றன.தான் கதையின் நாயகன் என்பதை இந்த படத்திலும் விஜய் சேதுபதி நிரூபித்துள்ளார். அதேபோல திரிஷாவின் நடிப்பும் தத்ரூபமாக உள்ளது.
இயக்குநர் பிரேம் குமார் தனது கதையை அழகான காட்சிகளாக விவரித்துள்ளார். படத்தின் 2-வது பாதி முழுக்க விஜய் சேதுபதி-திரிஷா என இரண்டு கதாபாத்திரங்கள் தான் என்றாலும், படத்தை போரடிக்காமல் பார்க்க முடிகிறது. படத்தில் இடம்பெறும் லவ்,ரொமான்ஸ், சின்னச்சின்ன நெகிழ்ச்சியான காட்சிகள் ஆகியவை படத்தின் உயிரோட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றன. அழகான, நெகிழச் செய்யும் ஒரு கிளைமாக்ஸை எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் கொடுத்த இயக்குநர் பிரேமுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாடல்கள் படத்தில் சரியான தருணங்களில் இடம்பெறுகின்றன. குறிப்பாக கோவிந்த் வசந்த் இசையில் காதலே காதலே பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம். தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் படத்துக்கு கோவிந்த் வசந்த் உயிரூட்டியுள்ளார் என்றால் மிகையல்ல. இதேபோல மகேந்திரன் ஜெயராஜ்,சண்முக சுந்தரம் இருவரின் ஒளிப்பதிவு படத்தின் அந்தந்த காலகட்டத்தை தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு வருகிறது.இதேபோல நேர்த்தியாக காட்சிகளை தொகுத்துக் கொடுத்த விதத்தில் எடிட்டர் கோவிந்தராஜ் கவர்கிறார்.
(எங்கள் விமர்சன குழு இன்று (அக்டோபர் 1) பிரத்தியேக காட்சியை பார்த்த பின்னர் இந்த விமர்சனம் எழுதப்பட்டது. 96 திரைப்படம் அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது)