சமுதாயத்தில் நிலவும் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் 4 பெண்களின் வாழ்வில் ஒரு நவ நாகரிக பெண் நுழைகிறார். பின்னர் அவர்கள் என்ன விதமான மாற்றங்களைச் சந்திக்கிறார்கள் என்பதே 90 ml படத்தின் கதை.
படத்தின் நாயகியாக ஓவியா. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படாமல் தான் விரும்பிய போக்கில் வாழ்க்கையை வாழும் கேரக்டர். தன் அநாசயமான நடிப்பால் மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.
படத்தின் இயக்குநர் அழகிய அசுரா. சமூகத்தில் பெண்களுக்கு நிலவும் பிரச்னைகள் குறித்து காட்சிகளாகவும், வசனங்களாகவும் மிக வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசியிருக்கிறார். ஆங்காங்கே வரும் திடீர் திருப்பங்கள் சுவாரஸியம் அளிக்கின்றன.
பிரச்சனைகளில் இருந்து அந்த பெண்கள் மீண்டு வந்தால் என்னவாகும் என்று கதை கேட்கும் போது இருக்கும் சுவாரஸியம் பெரும்பாலான காட்சிகளில் இல்லை. மேலும் வெறும் காட்சிகளாக சில காட்சிகள் நன்றாகவே இருக்கிறது. ஆனால் அது திரைக்கதையோடு ஒன்றி பயணிக்காமல் தனியாக துருத்தி தெரிவது மைனஸ்
ஓவியாவைத் தவிர படத்தில் பெரும்பாலோனோர் புதுமுகங்கள். இருப்பினும் அந்தந்த கேரக்டர்களுக்கு தங்களால் முடிந்தவரை உயிர்கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை சிம்பு. மெதுவாக நகரும் பெரும்பாலான காட்சிகளுக்கு தன் இசை மூலம் பரபரப்பு சேர்த்திருக்கிறார். தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா.
பெண்களின் சிக்கல்கள் குறித்து பேசும் படத்தில் எல்லா பிரச்சனைகளும் ஆண்களாலேயே நிகழ்வது சற்று முரண். ஆனாலும் பெண்கள் பேசத் தயங்குகிற அவர்களது ஆசைகளை, மறைமுக பிரச்னைகளை தைரியமாக பேசியிருக்கிறது இந்த 90 ml.