இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, கேப்டன் விஜயகாந்தின் 'அலெக்ஸாண்டர்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
அமிதாப் பச்சன் தயாரிப்பில் அஜித் நடித்த 'உல்லாசம்', சுந்தர்.சியின் 'நாம் இருவர் நமக்கு இருவர்', கமல்ஹாசன் - பிரபு தேவா இணைந்து நடித்த 'காதலா காதலா' மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவான 'டும், டும், டும்' போன்ற படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் அவரது சாதனைகள் குறித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, என்னுடைய கூற்று தவறில்லையென்றால், அவரதாரம் படத்தில் இடம் பெற்ற தென்றல் வந்து தீண்டும் போது பாடலுக்கு ஆர்கெஸ்ட்ரா செய்தது எங்களுடைய மூத்த அண்ணன் கார்த்திக் ராஜா என நினைக்கிறேன் என்றார். மேலும் இதனை உறுதிசெய்யுமாறு யுவன் ஷங்கர் ராஜாவை கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த யுவன், உறுதியாக தெரியவில்லை. அப்பாவை தான் கேட்க வேண்டும். ஆனால் நானும் அப்படித் தான் நினைக்கிறேன். என்றார்.
வெங்கட் பிரபுவின் பதிவிற்கு பின்னூட்டமிட்ட இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி, அந்த பாடல் மட்டுமில்லை. அப்பாவுடைய நிறைய பாடல்களுக்கு கார்த்திக் ராஜா வேலை செய்திருக்கிறார். அதில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட். மேலும் பின்னணி இசையும் அமைத்திருக்கிறார். என்றார்.
மற்றொரு பின்னூட்டத்தில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், 'இவன்' படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான அப்படி பாக்குறதுன்னா வேணா என்ற பாடலுக்கு அபார ஆர்கெஸ்ட்ரேஷன் அமைத்தவர் கார்த்திக் ராஜாதான் என்றார்.
பழம்பெரும் இயக்குநர் மகேந்திரனின் மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன், நீங்கள் ட்விட் செய்தது சரிதான் பிரபு, நான் தென்றல் வந்து தீண்டும் போது பாடல் குறித்து புகழ்ந்து பேசும் போது ராஜா அங்கிள் இதனை என்னிடம் சொன்னார்.