பள்ளிப் பருவ காதலர்கள் பின்னாளில் சந்தித்துக் கொண்டால் அவர்களுக்குள் நிகழும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் 96. விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி, ஜனகராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாப்பாத்திரத்துக்கான நியாயம் செய்திருந்தனர்.
இயக்குநர் பிரேம் குமாரின் இயல்பான காட்சி அமைப்புகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்தது. கோவிந்த் வசந்தாவின் இசையும் இந்த படத்துக்கு மிகப்பெரிய துணை புரிந்தது. காதலே காதேலவாக இருக்கட்டும், லைஃப் ஆஃப் ராமாக இருக்கட்டும் அனைவராலும் அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த படம் நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் இந்த படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனக்கே உரித்தான பாணியில் படக்குழுவினரை பாராட்டி பேசினார். அப்போது விஜய் சேதுபதியையும் த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்த பார்த்திபன் இருவரையும் கட்டிப்பிடிக்க சொன்னார்.
மேலும் பயப்படாதிங்க சார், நான் இருக்கேன்னு நக்கலாக தெரிவித்தார். பின்னர் மேடையேறிய விஜய்சேதுபதி முதலில் பார்த்திபனையும், பின்னர் த்ரிஷாவையும் கட்டிப்பிடித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி இது தான் 96 படத்தினுடைய க்ளைமேக்ஸ் என்றார்.