தல அஜித் - சிவா கூட்டணியில் ஜனரஞ்சகமாக உருவாகியிருக்கும் படம் விஸ்வாசம். பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக அஜித் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில்,
இது அஜித் சாரோட நாலாவது படம். ஒவ்வொரு படத்துலயும் இன்ட்ரரோ சீனுக்காக நிறைய மெனக்கெடுவோம். உதாரணமா வீரம் படத்தில் அஜித் சார் குடை பிடிச்சுட்டு வர சீன் பெரிய வரவேற்பை கொடுத்தது.
அப்படி விஸ்வாசம் படத்துக்காக நானும் சீவாவும் நிறைய விவாதித்து காட்சிகளை உருவாக்குவோம். சிவா என்னுடைய நண்பன் என்பதால் எனக்கு இலகுவாக இருந்தது.
விஸ்வாசம் படத்தில் முதல் பகுதி கிராமத்தில் நடப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். கிராமத்து மக்களோடு மக்களாக அஜித் இருப்பார். மக்களுக்கு எதாவது பிரச்னை என்றால் இவர் தான் முன்னாடி நிற்பார். அப்படி தான் டிரெய்லரில் பின்னால் திரும்பி கையை மேலே தூக்கியிருக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
ரசிகர்கள் கொண்டாட, விசில் அடிக்க படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன. அஜித் சார் இது போன்ற ஒரு பொழுதுபோக்கு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து 10-12 வருடங்கள் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். வீரம், வேதாளம், விவேகம் என அவரின் முந்தைய படங்களில் கூட, அவரது கதாபாத்திரங்கள் தீவிரத்தன்மையுடன் இருக்கும்.
ஆனால், விஸ்வாசம் படம் அவரின் எண்டர்டெயினர் அவதாரத்தை முழுமையாக வெளிக் கொண்டு வரும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மிகவும் விரும்புவார்கள். அதேபோல அவரது எமோஷனல் கோணத்தையும் பெரிய அளவில் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார். "தூக்குதுரை" கதாபாத்திரத்துடன் ரசிகர்கள் எமோஷனலாக ஒன்றி விடுவார்கள்
கதை இரண்டு வேறுபட்ட பின்னணியில் நடப்பதால் நாங்கள் இருவேறு கலர் டோன் பயன்படுத்தியிருக்கிறோம். சண்டைக்காட்சிகளைப் பொறுத்தவரையில், மழை எபிசோடு மிகவும் சவாலான பகுதியாக இருந்தது. பார்வையாளர்கள் அதனை மிகவும் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன் என்றார்