கடந்த பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராசன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உயிரிழந்தார். மறைந்த நடராசன் உடலுக்கு பல்வேறு தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இலட்சிய திமுக கட்சித்தலைவர் டி.ராஜேந்தர் மறைந்த நடராசன் அவர்களின் உடலுக்கு, இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்தார். அஞ்சலி செலுத்திய பின் பத்திரிகையாளர்களுக்கு டி.ராஜேந்தர் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், அண்ணனாகவும் இருந்தவர் நடராசன். அவருடைய ஈழத்தமிழர் உணர்வும், தமிழும் எனக்குப் பிடிக்கும். சசிகலா அம்மா, சின்னம்மா அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. பெரியம்மாவிற்கும் எனக்கும் பாலமாக இருந்தது அவர்தான்.
அவங்களுக்கு நான் வேறுவிதத்தில் ஆலோசகராக இருந்தேன். நான் சொன்ன ஆலோசனையை அந்தம்மா ஏற்றுக்கொள்ளவில்லை. யாரோ சொன்னதைக் கேட்டாங்க.அது சூழ்ச்சி.
அது இந்தம்மாவிற்கு எதிராக செய்கிற வீழ்ச்சி. என் பேச்சைக் கேட்டு இருந்தால் அம்மா இருந்திருப்பாங்க நல்ல அறையில. ஆனா இன்னைக்கு அம்மா இருக்காங்க சிறையில. என்னுடைய பேச்சைக் கேட்டிருந்தால் சசிகலா ஜெயிலுக்குச் சென்றிருக்க மாட்டார்.
'தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்' என்பார்கள். அதற்காகத்தான் இங்கே வந்தேன். நடராசன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.