Actor Sivakumar who had worked with our former Chief Minister Jayalalithaa in 14 films in the past has expressed his sorrow over her death.
"மனித இனம் தோன்றிய நாள் முதல் நாம் பெண்களை கொத்தடிமைகளாக, சம்பளமில்லாத வேலைக்காரிகளாக, பிள்ளை பெறும் எந்திரமாகவே நடத்தி வந்திருக்கிறோம். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், டெமஸ்தனிஸ், டால்ஸ்டாய், காந்திஜி உள்பட பல மேதைகள் பெண்களை இரண்டாம் தரத்தில் வைத்தே பார்த்திருக்கிறார்கள். அந்தப் பெண் இனத்தில், கோடிக் கணக்கான மக்களின் இதயத்தில் இடம் பிடித்த அபூர்வப் பெண்மணி ஜெ.அம்மையார். இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர்,இந்திய பிரதமர் இந்திரா காந்தி வரிசையில் இன்னொரு Iron Lady யாக மதிக்கப்பட்டார் . திரையுலகில் கதாநாயகியாகவே துவக்கத்திலிருந்து நடித்து ராணியாகவே வாழ்ந்தவர். கிட்டத்தட்ட 20ஆண்டுகள் 116 படங்களில் நடித்தார். அதில் எட்டுப் படங்களில் அவரோடு நானும் நடித்திருக்கிறேன். 'கந்தன் கருணை'யில் அவர் வள்ளியாகவும் நான் முருகனாகவும், 'கிருஷ்ண லீலா' வில் அவர் பாமாவாகவும் நான் கிருஷ்ணனாகவும் நடித்தோம். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சக கலைஞனை மதித்து, என் குழந்தைகள் மூவரின் திருமணத்திற்கும் தவறாது வந்து ஆசி கூறிச் சென்றார். அரசியலில் கால்பதித்து 34 ஆண்டுகள் ஆகின்றன.அதில்15 ஆண்டுகள் பதவியில் இருந்திருக்கிறார். அம்மா, அப்பா உயிரோடு இல்லை. சொந்த பந்தம் என்று சொல்லிக் கொள்கிறாற் போல, அவரோடு கூட யாரும் இல்லை. தனியாளாக , அசாத்தியத் துணிச்சலுடன் ஆணாதிக்க அரசியல் உலகில் கால்பதித்து, கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்று 5 முறை அவர் முதல்வரானது சரித்திர சாதனை. கண்ணீர் சிந்தும் கோடி மக்களில் இப்போது நானும் ஒருவனாய் நிற்கிறேன். இறுதி அஞ்சலி செலுத்த, குடும்பத்தினருடன் சென்றேன். சூர்யா, கார்த்தி சென்று மரியாதை செய்து வந்தனர். அவர் ஆத்மா சாந்தி அடைவதாக."- Sivakumar