பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அண்மையில் வெளியான படம் கனா. இதனை அவரது நண்பரும் பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறன் கொண்டவருமான அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார். அவரது மற்றொரு நண்பரான திபு நிணன் தாமஸ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
முதன்மை வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க அவரது தந்தையாகவும், விவசாயியாகவும் ஒரு தேர்ந்த நடிப்பை வழங்கியிருந்தார் நடிகர் சத்யராஜ்.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிவ கார்த்திகேயன்,
வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர்.
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை செய்ய இருக்கிறோம் என்றார்.