‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற ஹிந்தி படப்பிடிப்பின் போது ‘வெளி மான்’ (பிளாக் பக்) என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
இவ்வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும், கடந்த மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், ஜோத்பூர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பினை இன்று வழங்கியது.
அதன்படி இந்த வழக்கில் நடிகர் சல்மான் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து உடனடியாக அவர் ஜோத்பூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சல்மானுக்கு ஜாமீன் வாங்கும் வேலையில் அவர் வழக்கறிஞர் ஈடுபட்டுள்ளதால் இன்று மாலைக்குள் அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும் என கூறப்படுகிறது.
ஒருவேளை ஜாமீன் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் இன்று இரவு அவர் ஜெயிலில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.