மேட் இன் சென்னை (Made in Chennai) என சென்னை நகரையும், ஆறுகளையும் சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு முயற்சியில் நமது 'பிஹைண்ட்வுட்ஸ்' ஊடகம் களம் இறங்கியது அனைவரும் அறிந்த ஒன்றே.
விழிப்புணர்வு தொடர்பான வீடியோக்களை மட்டும் வெளியிடாமல், களத்திலும் நாம் இறங்கி சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான வடபழனி பேருந்து நிலையத்தை கடந்த ஜனவரி 21-ம் தேதி சுத்தம் செய்தோம்.
இதுதவிர, சென்னையின் முக்கிய கடற்கரைகளில் ஒன்றான எலியாட்ஸில் (பெசண்ட் நகர்) ஜனவரி 28-ம் தேதி, நடிகர் ராகவா லாரன்ஸ் தலைமையில் வாக்கத்தான் (Walkathon) ஒன்றையும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முயற்சியின் நிறைவு விழா, சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலான 'ரமடா பிளாசா'வில்(Ramada Plaza) நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக சீமான்(நாம் தமிழர் கட்சி), அன்புமணி ராமதாஸ்(பாமக), இயக்குநர் மோகன்ராஜா மற்றும் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக 'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு உரையாற்றினார். அரசியல் துளியும் கலக்காத அவரது பேச்சிலிருந்து ஒருசில துளிகள் உங்களுக்காக...
தூய்மையான தேசம் படைக்க எழுந்து நிற்கிற உங்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்.மண் மட்டும் தூய்மையாக இருந்து பயன் இல்லை. மனதும் தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாடும் தூய்மையாகும்.
எது தூய்மையான இந்தியா? ஊழல்-லஞ்சமற்ற, பசி-பஞ்சமற்ற, சாதிய-இழிவற்ற, தீண்டாமையற்ற, ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு அற்ற, பெண்ணிய அடிமைத்தனம் அற்ற தேசம் என்று உருவாகிறதோ அன்றுதான் உண்மையான தேசம் உருவாகும்.
''புரட்சி என்பது ஒவ்வொரு மனிதனின் காலடிக்குக் கீழே காய்ந்த சருகுகளாகக் கிடக்கிறது. ஒரு தீக்குச்சியின் உரசலுக்காக காத்துக்கொண்டு,'' அப்படி உரசிப்போடுகிற தீக்குசிகளாக உங்கள் ஒவ்வொருவரையும் நான் பார்க்கிறேன்,'' நன்றி வணக்கம்.
கீழே உள்ள வீடியோ இணைப்பில் சீமானின் முழு பேச்சையும் பார்க்கலாம்...