இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் மாதவன், இந்த படத்திற்காக அவர் போட்ட மேக்-அப் அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்கி வந்த ஆனந்த் மகாதேவன், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் பொறுப்பை முழுவதுமாக நடிகர் மாதவன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார். சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
ராக்கெட்ரி திரைப்படத்தை தனது கனவு படமாக கருதும் மாதவன், இப்படத்தில் நம்பி நாராயணனாக மாற தான் எடுத்த முயற்சிகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்த கேரக்டருக்காக 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன். இப்போது இந்த கதாபாத்திரத்தின் மேக்-அப்பிற்காக 14 மணிநேரம் அமர்ந்திருக்கிறேன். நன்றாக வரும் என நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது 14 மணிநேர மேக்-அப் முடிவடைந்து நம்பி நாராயணனின் ஜெராக்ஸாக மாறிய மாதவன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணனும், நம்பி கெட்டப்பில் நடிக்கும் மாதவனின் புகைப்படமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.