முதல் படமான கனாவின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து தயாரிக்கும் படத்தில் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலான் இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தில் ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.
இப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை.
வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம், அதே சமயத்தில் டப்பிங் பணிகளையும் துவக்கியிருக்கிறோம்" என்றார்.
நடிகர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும், அவர்கள் ஏற்கனவே தங்கள் திறமையால் மிகவும் புகழ் பெற்றவர்கள். ரியோ ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் நபராக மாறிவிட்டார். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடிக்க வந்தது எங்கள் அதிர்ஷ்டம். நாஞ்சில் சம்பத் சார் எங்கள் படத்துக்கு ஒரு வைரக்கல். நான் சில நேரங்களில் நாஞ்சில் சம்பத் சாரின் எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையை பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். நிச்சயமாக, ஆர்.ஜே. விக்னேஷ்காந்தும் அவர் பங்குக்கு நகைச்சுவை விஷயங்களை அளித்திருக்கிறார்" என்றார்.