தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, குமரரெட்டிபாளையம் பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கும் மேலாகபோராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் இக்கிராம மக்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தூத்துக்குடிக்கு சென்று, போராட்டக்களத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேசிய கமல், "நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன்.நான் தமிழன், உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்ட உணர்வு இது,'' என தெரிவித்தார்.
முன்னதாக இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், "மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும். குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள்,'' எனகூறினார்.