கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் மரணமடைந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த 27 - ஆம் தேதி இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை தகர்த்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) காலையில் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் எஃப்16 விமானம் வீழ்த்தப்பட்டது. இந்த மோதலில் இந்திய விமானம் ஒன்று பாக் எல்லைக்குள் தவறிவிழுந்தது. அதிலிருந்து விங் கமாண்டர் அபிநந்தன் தற்போது பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகிறது.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அவரிடம் கண்ணியமாக நடந்துகொள்வதாக அபிநந்தன் பேசும் வீடியோ மக்களிடையே சற்றே ஆறுதல் அளித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ஏற்கனவே மனோபலம் உள்ள உங்களைப் போன்ற போர் வீரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாடே உங்களுடன் இந்த இக்கட்டான சூழலில் துணை நிற்கிறது.
உங்கள் மகன் இந்த நாட்டிற்கு செய்திருக்கும் பணி உன்னதமானது. உங்களைப் போல போர் தர்மம் அறிந்த, புரிந்த வீரர்கள் அங்கு இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு, எனவே அபிநந்தன் நலமாக நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்புவார்.
இதுகுறித்து நான் கீச்சுப் பதிவு (ட்விட்டர்) எதுவும் வெளியிடவில்லை. ஏனெனில் இது விவாதப் பொருளோ அல்லது அதற்கான நேரமோ அல்ல. இது விவேகத்திற்கான நேரம் . என்று குறிப்பிடப்பட்டுள்ளது.