சென்னையில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் ஒரு கலைஞன், எனக்கு அரசியல் வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அரசியல்வாதிகள் அவர்கள் வேலையைச் சரியாக செய்யவில்லை. யார் அந்த வேலையை செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருப்பதை விட நாமே அதைக் கையிலெடுக்க வேண்டும்.
மகளிர் தினம் என்று இந்த ஒரு நாளை மட்டும் கொண்டாடக் கூடாது. 365 நாட்களும் மகளிர் தினம் தான். பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்.
மய்யம் என்பது நடுவில் நிற்பது அல்ல, அது ஒரு தராசு முள் போன்றது. நடுவில் இருந்து இரண்டையும் கவனித்து நல்லவற்றின் பக்கம் நின்று நேர்மையான முடிவை எடுப்பது. மய்யத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் பொறுப்பு உங்களுக்கு புரியும். மிகவும் கடினமான விஷயம் அது.
இவ்வாறு அவர் பேசினார்.