இயக்குநர் கார்த்திக் நரேனின் குற்றச்சாட்டுகளுக்கு, இயக்குநர் கவுதம் மேனன் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து கவுதம் மேனன் கூறி இருப்பதாவது:-
'நரகாசூரன்' குறித்து பல நல்லது நடந்தபோது என் இயக்குனர் கார்த்திக் நரேனின் ட்வீட் என்னை அதிருப்தி அடைய வைத்தது. மீடியாக்களிடம் இருந்துபோன் கால்கள் வந்ததும் அப்செட் ஆகி பதிலுக்கு நான் ட்வீட் செய்தேன். நான் அப்படி செய்திருக்கக் கூடாது. அதற்காக நான் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நிறைய போன் கால்கள் வந்ததால் அப்படி செய்துவிட்டேன். 'நரகாசூரன்' ஸ்க்ரிப்ட் விஷயத்தில் நான் தலையிட்டது இல்லை. கார்த்திக் கேட்பதை கொடுக்குமாறு தான் முதலீட்டாளர்களிடம் கூறினேன். அவருக்கு சுதந்திரம் கொடுத்தேன். அதிக சம்பளம் கொடுத்து அவர் கேட்ட நடிகர்களை நடிக்க வைத்தோம். டீஸர், ட்ரெய்லர் எல்லாமே அவருடையது தான்.
'துருவ நட்சத்திரம்' போன்ற பெரிய படத்திற்கு நிதியைத் திருப்பிவிடும் அளவுக்கு பிசினஸ் பெரிது அல்ல. 'நரகாசூரன்' லாபத்தில் 50 சதவீதம் நான் கேட்கவில்லை. படத்தில் எனக்கு பங்கு இல்லை என்று தெரியும்.
'துருவ நட்சத்திரம்' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகியவை ஒரு பயணம். நடிகர்கள் டேட்ஸ் கொடுக்கும்போதே படமாக்கினோம். 'துருவ நட்சத்திரம்' 70 நாட்களும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' 45 நாட்களும் இதுவரை படமாக்கப்பட்டுள்ளது. இரண்டுமே பெரிய ஸ்டார்களை வைத்து எடுக்கப்படும் பெரிய படங்கள். விரைவில் இந்த ஆண்டே ரிலீஸாகும்.
அண்மை காலமாக பிற படங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுடன் ஒப்பிடும்போது 'நரகாசூரன்' பிரச்சனை ஒன்றுமே இல்லை. ஒரு குழு நல்லபடியாக வேலை பார்த்தால் அதைக் கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். படத்தை முடித்து ரிலீஸ் செய்ய எங்களிடம் திட்டம் உள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.
கார்த்திக் தனது அடுத்த படத்தை துவங்குவதை நாங்கள் தடுக்க மாட்டோம். அவர் தாராளமாக செய்யலாம், ஏற்கனவே வேலையை துவங்கிவிட்டார்.முழு பணத்தையும் கொடுக்கும் வரை டப்பிங் பேசமாட்டேன் என்று கூறிய அரவிந்த்சாமி பணம் கொடுத்த பிறகு பேசுவார். கார்த்திக் மற்றும் எனக்கு இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டது. படம் விரைவில் ரிலீஸாகும்.