தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிப்பதாகவும், இயக்குநர் பாலா இந்த படத்தை இயக்குவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியானது. இந்த மாதம் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரித்த வி4 எண்டர்டெயின்மென்ட் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், இந்த படத்தின் இறுதி வடிவத்தை பார்த்தபோது தங்களுக்கு திருப்தி இல்லை எனவும். அதனால் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் மாற்றப்பட்டு மீண்டும் படப்பிடிப்புகள் நடைபெறும் என அறிவித்தது. மேலும் இந்த படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் எனவும் அறிவித்தனர்.
இது தமிழ்திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் பாலா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில்,
வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால் இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.
படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்த தங்களின் பார்வைக்கு...
துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை. என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிப்பாளருடன் தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் அதனுடன் இணைத்துள்ளார்.