தேசிய விருது வென்ற ‘டுலெட்’ திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக செல்கின்றனர்.
கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் மொத்தமாக அணிதிரண்டு
ஊர்வலமாகச்சென்று டுலெட் படம் பார்க்கவுள்ளனர். தமிழகம் முழுக்க டுலெட் படத்தை ஒரு நல்ல படத்துக்கான இயக்கமாக மாற்ற மாணவர்கள் அணி திரள்கின்றனர். வடகோவையில் அமைந்துள்ள ப்ரூக்பீல்ட் திரையரங்கில், இன்று பிற்பகல் 2 மணிக்கு டுலெட் படம் பார்க்கச் செல்கின்றனர்.
முன்னணி ஒளிப்பதிவாளரான செழியன் இயக்குராக அறிமுகமாகியுள்ள படம் 'டுலெட்'. சந்தோஷ் ஸ்ரீராம், சுசீலா, தருண், ஆதிரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை செழியனே தயாரிக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எந்த மாதிரியான கஷ்ட்டங்களை எதிர்கொள்கிறார்கள், அதிலும் நடுத்தர வர்க்கத்தினர் வாடகை வீட்டாலும், வாடகை வீட்டுக்காகவும் எப்படி தங்களது சிறு சிறு சந்தோஷங்களை இழந்து வேதனையோடு வாழ்கிறார்கள், என்பதை எதார்த்த பாணியில் உணர்த்தும் திரைப்படம் ‘டுலெட்’.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று, பலரது பாராட்டினையும் பெற்ற இப்படத்திற்கு தற்போது மக்களும் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.