சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. ஆனால் காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.இதில் பிரசாந்த் ரங்கசாமி, கோபி, சுதாகர், ப்ளு சட்டை மாறன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் மாறன் பேசும்போது,"இன்று காலை 10 மணி ஆர்ப்பாட்டத்துக்கு நேற்று இரவு 10 மணிக்குத் தான் அனுமதி கொடுத்தனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு இதுதான்.
தயவுசெய்து யாரும் ஐபிஎல் பார்க்க வேண்டாம். சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே ஆம்புலன்ஸை தயார் நிலையில் நிறுத்தி வைக்கத் திட்டம் வகுத்து வருகின்றனர்.
சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் ஆம்புலன்ஸை கொண்டு வரப்போவதாகக் கூறுகின்றனர். இவ்வளவு தடைகளையும் மீறி உள்ளே செல்பவன் அருகிலிருப்பவனைக் கடித்து வைத்து விட்டால் என்ன செய்வார்கள்?,'' இவ்வாறு அவர் பேசினார்.