Behindwoods.com isn't responsible for the views expressed by the visitor in this column. The visitor claims that this column is his/her own. If the column infringes any copyrights that you hold, please email us at columns@behindwoods.com.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் பார்மிங்க்டன் நகரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒன்று கூடல் 15-01-2017 அன்று மாலை நிகழ்ந்தது.
தமிழகத்தில் இவ்வாண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என சட்டரீதியாக வழக்காடியும், மக்கள் மன்றங்களிலும் தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்போராட்டங்களுக்குத் தங்கள் ஆதரவினைத் தெரிவித்தும் , ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரியும் அயலகத் தமிழர்களும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இன்று மாலை அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் பார்மிங்க்டன் நகரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான ஒன்று கூடலில் நூற்றி ஐம்பதிற்கும் மேலானோர் கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழுமி ஜல்லிக்கட்டிற்குத் தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாட்டோடு இயைந்தவொன்று எனவும், தமிழர்கள் தங்கள் வீட்டு காளைகளையும் பசுக்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறார்கள் என்றும் ஒன்று கூடலில் பேசியவர்கள் கருத்துத் தெரிவித்தனர். உலகம் முழுதும் போராட்டங்களிலும், ஒன்று கூடல்களிலும் பங்கேற்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசும், மத்திய அரசும் தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
இவ்வொன்று கூடலில் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் பங்கேற்று ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான அவர்களின் கருத்துகளையும் பதிவு செய்தனர்.