சிங்கம் 4 வேண்டும்... ஆனால்!
சிங்கம் 1- இப்படியொரு போலீஸ் பேசுவாரா, ஏன் இவ்வளவு சத்தம் என்றெல்லாம் யோசனைகளை என் முதுகிலேற்றியபடி படம் பார்த்தேன். துரைசிங்கம் என்னும் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகள் அவ்வளவாய் ஈர்க்கவில்லை!
சிங்கம் 2 - முன்னறிமுகம் இருந்ததால், துரைசிங்கம் ஹீரோவாக, ஈடு இணையில்லா எனர்ஜி சோர்ஸாக கண் முன் தெரிந்தார். பெரிதாக எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி இரண்டாம் பார்த்தது ஒரு பெரிய காரணமாக இருக்கலாம், எது எப்படியோ என்னை ஈர்த்தது துரைசிங்கத்தின் இரண்டாம் பாகம்!
சி 3 - எனக்குப் பிடித்திருந்தது, நான் பல இடங்களில் மகிழ்ந்தேன், கை தட்டி ரசித்தேன், தொண்டை கிழிய சத்தம் போட்டு இரண்டு மூன்று முறை முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரை திரும்பிப் பார்க்கச் செய்தேன்! ஆனால், படம் முடிந்ததும், 'சிங்கத்தின் வேட்டை தொடரும்' என்று திரையில் வந்ததும், திரையரங்கைவிட்டு பல கேள்விகளுடன் வெளியேறினேன்.
மூன்று பாகங்களை கண்டு அதிலரண்டை ரசித்த ஒருவனாக இப்பொழுது எனக்குத் தோன்றுவது,
சிங்கம் 4 வேண்டும்.
ஆனால்,
1 கட்டாய காமெடிகள் வேண்டாமே!
- தேவையில்லாத இடத்தில்
- வைத்தே ஆக வேண்டும்
- அதற்காக சிலர் வருவார்கள்
- இல்லையென்றால் தவராகிவிடுமோ போன்ற காரணங்களுக்காக மட்டும் காமெடி காட்சிகள் வைக்காத சிங்கம் 4!
2 துரைசிங்கம் ஆட வேண்டாமே!
நாயகன் படத்தின் 25ஆம் ஆண்டு நிறைவை பேசும் ஒரு கட்டுரையில் கமல் ஹாசன் அவர்கள் இப்படி எழுதியிருந்தார்...
நான் மணிரத்னத்திடம் ''வேலு நாயக்கர் ஆடக்கூடாது!'' என்றேன், அவரும் அதனை ஏற்றுக்கொண்டு “என்ன சந்தேகம், நிச்சயமாக வேலு நாயக்கர் ஆட மாட்டார்!” என்றார்.
இது போன்ற ஒரு தெளிவோடு பார்த்தால், வீரமும் விவேகமும் நிறைந்த துரைசிங்கம் ஆடுவாரா? ஆட வேண்டுமென்ற அவசியம் இருக்கிறதா?
ஏன் ஆடக்கூடாது என்று கேட்பவர்களுக்கு... ஆடாமல் இருந்தால் அந்த கேரக்டருக்கே உரித்தான பலம் பன்மடங்காகும். துரைசிங்கம் காதலிக்கலாம், பாடல்கள் வாழ்க்கையோடு ஒன்றி அவரின் காதல் கதையை காட்டலாம் அது அவருடனான நம் பயணத்தை இன்னும் நீட்டிக்கும்.
துரைசிங்கம் குத்தாட்டமோ, ஸ்டைலிஷ் ஃப்ரீ ஸ்டைல் நடனமோ ஆடாத சிங்கம் 4 வேண்டும்!
இப்படியொரு சிங்கம் 4 வேண்டும். அது சூரியா என்னும் மாபெரும் பக்க பலத்தோடு, இன்னும் அழுத்தமாக, உத்வேகமாக, மனதை ஆட்கொள்ளும் கர்ஜனையோடு பாயும்!
இப்படிக்கு,
துரைசிங்கம் ரசிகன்!