திரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு சார்ந்தது மட்டுமல்ல. திரைப்படங்களில் சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் போது அது இலகுவாக மக்களை சென்றடைகின்றன.
நம் சமூகத்தில் நிலவும் சாதி மத கொடுமைகள் பற்றி நம் திரைப்படங்கள் தொடர்ச்சியாக பேசி வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் காதலர்கள் இணைவதற்கு சாதி தடையாக இருக்கிறது என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் ஒரு படத்தின் பிரதான பிரச்சனையாக அல்லது பேசு பொருளாக சாதியைக் கொண்ட படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
உதாரணமாக பாரதிராஜாவின் வேதம் புதிது, சேரனின் பாரதிக் கண்ணம்மா, பருத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளை பொட்டில் அடித்தார் போல் நேரடியாக பேசின. மற்றொருபுறம் சாதி புகழ்பாடும் படங்கள் தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணம் இருந்ததையும் மறுப்பதற்கில்லை.
தற்போது இயக்குநர் ரஞ்சித்தின் வருகைக்கு பின் சினிமாவில் பேசப்படும் சாதி குறித்த விவாதங்கள் தலை தூக்கியிருக்கின்றன. திரைப்படங்கள் என்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வு சொல்வது அல்ல. விவாதத்தை ஏற்படுத்துவது. அது மக்களுக்கு அறிவுறுத்துவது. அந்த அளவில் பா. ரஞ்சித் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது படங்கள் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என சாதிப் பிரச்சனைகளை நேரடியாக எவ்வித சமரசமும் இல்லாமல் பேசின.
கடந்த வருடம் அவர் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதி ரீதியான கொடுமைகளை நேரடியாக பேசிய படம். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த இளைஞன் ஒருவன் இந்த சமூதாயத்தில் முன்னேறி வரும்போது சாதி ரீதியான தடைகளை சந்திக்கிறான் என்பதை பேசிய படம்
மற்றொரு பக்கம் தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒரு கலையை கற்க முயற்சிக்கும் போது என்ன மாதிரியான விளைவுகளை எதிர்கொள்கிறான் என்று பேசிய படம் சர்வம் தாளமயம்.
இரண்டு படங்களின் குறிக்கோளும் ஒன்று தான். ஆனால் சொன்ன விதம் தான் வேறு. பரியேறும் பெருமாளில் ஹீரோவின் ஊரில் உள்ள ஒரு பிரச்னையின் காரணமாக அவனது தாத்தா அவன் கண் முன்னாலேயே அவமானப்படுத்துவதை பார்க்கிறான். இதை தடுக்க என்ன வழி என அவன் தாத்தாவிடம் கேட்கும்போது, நீ படிச்சு வக்கீலாகு. அப்ப எல்லோரையும் கேள்வி கேட்கலாம் என்கிறார்.
அதற்கேற்ப சட்டக் கல்லூரியில் சேர்கிறான். எதற்காக அவன் சட்டம் பயில வந்தானோ அதுவே அங்கு உக்கிரமாக நடைபெறுகிறது. அவன் அங்கு மாற்றுச் சமூகத்தை சேர்ந்த பெண்ணை நேசிக்கும் போது , பெண்ணின் சமூகத்தை சேர்ந்த சக மாணவர்கள் எதிர்க்கிறார்கள். அந்த பிரச்சனைகளையெல்லாம் சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறான் என்பது படத்தின் கதை.
சர்வம் தாளமயத்தில் மிருதங்கம் செய்கின்ற தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த இளைஞன் மிருதங்கம் வாசிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதை கற்க முயலும்போது அவனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. அதிலிருந்து மீண்டு எப்படி தனக்கான வாய்ப்பை உருவாக்கி மிருதங்கம் வாசிக்கக்கற்று சாதிக்கிறான் என்பதே இந்த படத்தின் கதை.
இரண்டு படங்களின் நாயகர்களுமே ஒரு கட்டத்தில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் வெற்றி பெற அவர்கள் செய்யும் போராட்டங்களும் அவமானங்களும் வலி மிகுந்ததாக இருக்கின்றன.
இந்த இரண்டு படங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சாதி ரீதியான கௌரவக் கொலைகள் அதிகமாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இந்த இரண்டு படங்களின் வெற்றி, இந்த உலகம் அனைவருக்குமானது என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்கிறது.