சில படங்கள் காலத்தால் அழியாதவை. அவை வெளிவந்த காலகட்டத்தில் மட்டுமல்லாமல் எப்போது பார்த்தாலும் புதுத்தன்மையும் மெருகும் குறையாமல் அப்படியே இருக்கும். அழகியல்ரீதியான படமாக இருந்தாலும் சரி, அரசியல் படங்களானாலும் சரி, ஒரு கதையைத் திரைக்குள் செலுத்தி நிரந்தரத்தன்மை அடையச் செய்வது என்பது அசாதாரண விஷயம் என்பதை சினிமா தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அனைவருமே ஒப்புக் கொள்வார்கள். இயக்குநர் மணிரத்னத்தின் பல படங்கள் இந்தச் சட்டகத்தினுள் அடங்கும். மார்ச் 11, 1995-ஆம் ஆண்டு வெளியான 'பம்பாய்' இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்தும், இன்று பார்த்தாலும் அரசியல்ரீதியாக மட்டுமின்றி படைப்பு சார்ந்தும் தனித்தன்மையுடன் திகழ்கிறது. பம்பாய் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்தும் முக்கியமான படமானது எப்படி? அலசலாம்.
1993-ஆம் ஆண்டு நாடே அதிர்ச்சியில் ஸ்தம்பித்த தினம். மும்பையில் பல இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்து பல உயிர்களைப் பறித்த சம்பவம் நாட்டு மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக உலுக்கியெடுத்துவிட்டது. அனுராக் காஷ்யப் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான 'ப்ளாக் ஃப்ரைடே' இச்சம்பவத்தை மையமாகக் கொண்டு, உண்மைக்கு மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட படம். அதைத் தொடர்ந்து நஸ்ருதின் ஷா நடிப்பில் வெளியான ‘எ வெட்னெஸ்டே’ படமும் தீவிரவாதத்தை வேறொரு கோணத்தில் ஆராய முற்பட்டது. ஆனால் இந்தப் படங்கள் வெளியாவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னரே, இச்சம்பவம் நிகழ்ந்த இரண்டு ஆண்டுகளில் இயக்குநர் மணிரத்னம் 'பம்பாய்' படத்தை இயக்கினார்.. இப்படம் அச்சம்பவத்தை வேரினை ஆராயவில்லை மாறாக, மதநல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தியது, மேலும் ஒரு பத்திரிகையாளரின் நுட்பமான பார்வையிலும், ஒரு பாசமிகு தந்தையின் உணர்வினாலும் ரசிகர்களுக்கு சொல்ல வந்த கருத்தினை ஆணித்தரமாகக் கடத்தியது.
பிரபல நாளிதழின் பம்பாய் பிரிவில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் சேகர் (அரவிந்த்சாமி), சொந்த ஊருக்கு லீவில் வரும் போது, அங்கு தங்கையின் தோழியான சாய்ரா பானுவை (மனிஷா கொய்ராலா) சந்திக்கிறான். பேரழகியான அவளைக் கண்டதும் காதல் வயப்படும் அவன், அவள் முஸ்லிம் என்ற காரணத்தால் தந்தை மறுத்தும், தன் காதலில் தீவிரமடைகிறான். ஒரு கட்டத்தில் காதலியை அழைத்துக் கொண்டு இந்த ஊரும் உறவும் வேண்டாமென முடிவு செய்து பணியிடமான பாம்பேவிற்கு சாய்ராவை அழைத்துச் சென்று மணமுடிக்கிறான். சில ஆண்டுகள் மகிழ்ச்சியான வாழ்க்கை செல்கிறது. அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து சற்று வளர்ந்தபின், இருவரின் தந்தையும் (நாஸர் மற்றும் கிட்டி) பேரப் பிள்ளைகளைப் பார்க்க, வழக்கமான பெற்றோர்கள் செய்வதுபோல, ஆவலுடன் பாம்பே வருகிறார்கள்.
துடிப்பான காதல் படமாகத் தொடங்கிய பம்பாய் இந்தப் புள்ளியில்தான் வேறு திசையில் பயணிக்கத் தொடங்குகிறது. சேகர் சாய்ராவுடன் வசிக்கும் அப்பகுதியில் திடீரென வெடிக்கும் மதக்கலவரத்தால் பெரும் குழப்பம் ஏற்பட, அந்த அமளியில் இரட்டைக் குழந்தைகள் காணாமல் போகின்றனர். குழந்தைகளைத் தேடிச் செல்லும் சேகர் வழிநெடுகிலும் பல கொடூரக் காட்சிகளைக் காண நேரிடுகிறது. ஒரு பத்திரிகையாளனாக, ஒரு தந்தையாக ஒரு மனிதனாக அவன் தோற்று நிற்கும் இடம் அது என உணர்கிறான். எல்லா திசைகளிலும் கொழுந்துவிட்டு எரியும் வன்முறை நெருப்பை அணைக்க ஒருவழியும் தெரியாது திகைக்கிறான். இந்த தேசத்தில் இனத்தாலும், மதத்தாலும் நடக்கும் படுகொலைகளை முதன்முதலில் திரையில் பார்த்த ரசிகர்களின் மனசாட்சியையும் அக்காட்சிகள் உலுக்கத் தவறவில்லை.
சினிமா எனும் ஊடகத்தின் ஆகச் சிறந்த பயன் இதுவே. காலத்தைப் பதிவு செய்வது. காட்சிகளை மீள் உருவாக்குவது. திரையில் நாம் பார்த்தவை மிக மிகச் சொற்பமே. ஆனால் உண்மையில் ஆயிரம் சூரியனை விட கண்களை கூசச் செய்வது. க்ளைமேக்ஸில் அக்குடும்பம் ஒன்று சேர்ந்து சுபம் என்று முடிவடைந்தாலும், அப்படம் முன்வைத்த பல கேள்விகளுக்கு இன்றளவும் விடை கிடைக்காமல் மேலும் மேலும் வன்முறை தொடர்கதையாகி வருவது காலக் கொடுமையன்றி வேறென்ன. அதனால்தான் கலைஞர்கள் ஜிப்ஸியாக மாறி மீண்டும் மீண்டும் காலத்தின் தேவைக்கேற்ப உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரமான கலை இலக்கிய செயல்பாடுகளினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மெதுவாக இருந்தாலும், அவை தம் நோக்கத்தில் வெற்றி பெற்றால் போதும் என்பதே அப்படைப்பாளிகளின் பெரும் விருப்பம்.
பம்பாய் படம் வெளியான காலகட்டத்தில் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டது. முக்கியமாக நாட்டில் பற்றியெரியும் பிரச்னையை மணிரத்னம் கமர்ஷியலாக்கி படம் பண்ணுகிறார் என்ற குற்றச்சாட்டு ஒரு புறமும், இஸ்லாமியரின் அடிப்படைவாதத்தைக் கேள்விக்குட்படுத்தி அவர்கள் உணர்வுகளைக் காயப்படுத்திதிவிட்டார் என்று மற்றொரு புறமும் தாக்கின. ஒரு படைப்பை காலத்தின் பதிவாகப் பார்க்காமல், அதை ஆழமாகச் சொல்லவில்லை, அங்கிருந்து ஆரம்பிக்கவில்லை என்று கூறியவர்கள் அதே காலத்தின் பக்கத்தில் காணாமலாகியிருக்க, இன்றும் பாம்பே படம் மும்பைக் கலவரத்தின் திரைப் பதிவாக இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. இதன் விளைவாக குண்டுவெடிப்பைப் பற்றி படம் எடுத்தவரின் வீட்டு வாசலில் எறியப்பட்டது சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று. மணிரத்னத்தின் மீது வீசி எறியப்பட்ட குண்டு திசை தப்பி ஆஸ்பெட்டாஸ் கூரையில் விழுந்தது. அதில் அவருக்கும் வீட்டுப் பணிப்பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது. காலில் சற்று பலமாக அடிபட்டிருக்க, அதிர்ஷ்டவசமாக அன்று அவர் உயிர் தப்பினார்.
அதன் பிறகு, பல ஆண்டுகள் காவல் துறையினரால் அவருக்கு இஸட் பிரிவு சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் சில ஆண்டுகள் நடந்து கொண்டிருந்த போது, சாட்சி சொல்ல மணிரத்னம் சென்றார். அவர் மீது குண்டு வீசியவனின் முகம் மறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அந்தக் கண்களில் இருந்த வெறுப்பையும் தீவிரத்தையும் அவரால் மறந்திருக்க முடியுமா? மறக்க அல்ல, மன்னிக்க முடியும் என்று தனது சாட்சியத்தால் உறுதிப்படுத்தினார் மணிரத்னம். அந்த தூரத்திலிருந்து பார்க்கையில் மங்கலாகத் தான் தெரிந்தது, இவர்கள் அவர்கள்தானா என்று உறுதியாக கூறமுடியவில்லை என்று நீதிமன்றத்தில் சாட்சியம் கூறிவிட்டார் மணிரத்னம்.
அவர் மீது குண்டு வீசியவர்கள் அந்த அவர்கள்தான் எனில் அவர்களின் மனசாட்சிக்குத் தெரிந்திருக்கும். மன்னிப்பவன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்று இனி ஒருபோதும் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். அல்லது அவர்கள் நிரபராதிகளாக இருக்கும்பட்சத்தில், இக்குற்ற பத்திரிகையிலிருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள். அது எதுவாயினும், முடிந்த சம்பவத்தைக் கூறு போடுவதை ஒரு படைப்பாளி விரும்ப மாட்டான். தன் படைப்பிலிருந்து வெளியேறி அதன் சரி தவறுகளிலிருந்து பாடம் மட்டுமே எடுத்துக் கொண்டு, தன் அடுத்தப் படைப்புக்குள் சென்று விடுபவனே அசலான கலைஞன். அவ்வகையில் இன்றும் கூட யாரும் எடுக்கத் துணியாத படங்களை துணிச்சலுடன் சிறிதளவும் நோக்கம் சிதையாமல் இயக்கிக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்றவர்களால்தான் இந்தியத் திரையுலகம் தலைநிமிர்ந்து நடக்கிறது என்றால் மிகையில்லை.
எந்த நோக்கத்துக்காக ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டதோ அது நிறைவேறாதபோது உண்மையில் அத்திரைப்படம் தோல்வி அடைந்ததாகவே கருதலாம். படமாக பம்பாய் வெற்றி பெற்றிருந்தாலும், சமூக மாற்றங்களை வேண்டும் ஒரு படைப்பாக பம்பாய் காலத்தை கேள்விக்குட்படுத்தி காத்திருக்கிறது.