சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் வளரிளம்பெண்கள் மீதான சடங்குகள், கலாச்சார ரீதியான அழுத்தத்தை அழுத்தமாக பேசும் வெப்சிரீஸாக Zee5 தளத்தில் வெளியான `அயலி' கவனிக்க வைத்துள்ளது.
இப்படத்தில் அபி நக்ஷத்ரா (தமிழ்ச்செல்வி), அனு மோள் (தமிழ்ச்செல்வியின் அம்மா குருவம்மாள்) , அருவி மதன் குமார் (தமிழ்ச்செல்வியின் அப்பா), முனைவர் காயத்ரி (ஈஸ்வரி) மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் முத்துக்குமார் இயக்கியுள்ளார். ரேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். தவிர முக்கிய கதாபாத்திரங்களில், சிங்கம்புலி, லிங்கா, டி.எஸ்.ஆர். தர்மராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். நட்புக்காக லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, ஸ்மிருதி வெங்கட், செந்தில் வேல், பகவதி பெருமாள் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
கதைப்படி, 90களின் முற்பகுதியில் கிராமம் ஒன்றில் பெண்ணடிமைத் தனத்தின் ஒரு பகுதியாக வயது வந்த பெண்கள் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொள்ளவும், ஊரை விட்டு வெளியூர் செல்ல தடையும், பிற்போக்கான கட்டுப்பாடுகளும் ஊராரால் கட்டமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அத்துடன் இறுதியாக கட்டாயத்திருமணம் பண்ணிக்கொள்ள பணிக்கப்படும் கலாச்சாரம் நிலவுகிறது.
இப்படி ஒரு கிராமத்தில் பள்ளி மாணவியாக வரும் நாயகி தமிழ்ச்செல்வி டாக்டராக கனவு காண்கிறாள். ஆனால் அந்த கனவுக்கு தடையாக இருக்கும் தான் வயதுக்குவந்த தகவலை ஊராரிடம் இருந்து மறைத்து வாழ முற்படுகிறாள். இதனால் உண்டாகும் விளைவு, ஊரார் மாறினரா? தமிழ்ச்செல்வியின் செயல் எவ்விதம் ஒரு போகிற போக்கிலான சைலண்ட் புரட்சியை செய்கிறது என்பதையெல்லாம் நகைச்சுவை கலந்த டிராமாவாகவும், சமூகப் பொறுப்பு குன்றாமலும் சொல்லப்பட்டுள்ள எட்டு எபிசோடுகளே அயலி.
இலக்கியம், திரைத்துறை, அரசியல், சமூக வலைதளவாசிகள் மற்றும் ஐடி இளைஞர்கள் என பல தரப்பட்ட பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற அயலி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “அயலி என்று உண்மையிலேயே அம்மன் இல்லை. ஒரு கிரியேஷன் தான். ஆனால் டைரக்டர் முத்து அங்கிள் என்னிடம் கதை சொல்லும்போது, சென்னையில் கூட , இன்றும் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கூறினார். நான் இந்த கேரக்டரில் நடிக்கவேண்டும் என சொன்னார். நானும் முதலில் யோசித்தேன், ஆனால் பின்னர் இதனை பண்ண வேண்டும் என்றே நினைத்தேன். இது என் மூலமாக ஒரு விழிப்புணர்வை சொல்வதற்கான வாய்ப்பு, இதை நான் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தேன், இன்னும் சிறு சிறு விஷயங்கள் கூட படம் வந்த பிறகு புரிந்தது, கெத்தாக உணர்ந்தேன்.
தமிழ்ச்செல்வி கதாபாத்திரம் மிகவும் துணிச்சலான கதாபாத்திரம். இப்போதும் அந்த கதாபாத்திரத்திடம் இருந்து எதையே துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும், உரக்கப்பேச வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக்கொண்டேன். இயக்குநர் முத்து அங்கிள் அயலி என்றால், அயலான் மாதிரி அயலி.. போராடுற போராளி.. குட்டி.. செல்லக்குட்டி என்று கூறியிருந்தார்.” என தெரிவித்தார்.