Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது.
இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார்.சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். வியாழக்கிழமை வெளியான இந்த படம் முதல் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 22 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது பற்றி இசையமைப்பாளர் யுவன் நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை ரசிகர்களுக்கு எழுதியுள்ளார்.
அதில், எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே ! இறைவனின் கருனைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த இதயத்துடன், இந்த வெற்றிக்கு காரணமான அனைனவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமானதும், மிகவும் சிறப்பு மிகுந்ததுமான ஒரு படைப்பாகும். வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோருடன் தனித்தனியே இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற வெற்றி பாடல்கள் இருந்தன, ஆனால் எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை. ஆனாலும், இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் BGM இல் எனது புதிய முயற்சிகளை கூர்மையாக கவனித்து, அவற்றை தனித்த முறையில் பாராட்டியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது. என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி. எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்த திரைப்படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அவரது உழைப்பிற்கும் முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு நான் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன். எஸ்.ஜே.சூர்யா சார் தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு வலுவானதொரு தூணாக மாறியுள்ளார். மாநாடு படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனது இசை பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். "நீங்கள் உண்மையாக தேடி அலைவது, உங்களைத் தேடி வந்தடையும் " என்ற ஜாலாலுதீன் ரூமியின் ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. மாநாடு திரைப்படத்தின், ஒட்டுமொத்த குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும் பாராட்டுக்களும், கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி.