சினிமாவில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும்போது, 35 வயதான ஸ்டண்ட் மேன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பிடாடி அருகே உள்ள ஜோகேனஹள்ளியில் ‘லவ் யூ ராச்சு’ என்கிற கன்னடப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த போது ஸ்டண்ட் குழுவின் ஒரு பகுதியாக இருந்து உதவியவர் விவேக். அப்போது அங்கிருந்த மின் கம்பியை மிதித்து, மின்சாரம் தாக்கியதில் விவேக் உயிரிழந்துள்ளார். இதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக ஸ்டண்ட் மாஸ்டர் வினோத்தை காவலில் அழைத்துச் சென்றதுடன், படக்குழுவினரின் அலட்சியம் தான் இந்த விபத்துக்கு காரணம் என்றும், ‘லவ் யூ ராச்சு’ படக்குழுவினர் ஷூட்டிங்கிற்கு அனுமதி பெறவில்லை என்றும் பிடாடி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் அஜய் ராவ் மற்றும் ரசிதா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த விபத்து குறித்து பேசிய அஜய் ராவ், "சண்டை நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் நான் அமர்ந்திருந்தேன். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு என்ன நடந்தது என்று பார்க்க விரைந்து சென்றேன். ஆனால் விவேக் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்பதை அறிந்தேன். அத்துடன் சண்டைக் காட்சிக்காக படக் குழுவினரால் அந்த இடத்தைச் சுற்றி தண்ணீர் இருந்தது. கோவிட் -19 காரணமாக நான் ஸ்டண்ட் காட்சியில் நான் கலந்துகொள்ளவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
Also Read: பெரும் சோகம்!!! 9 முறை மூளை அறுவை சிகிச்சை செய்த பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்!