கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் விக்ரம். ஜூன் 3-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் வெளியிட்ட இந்த விக்ரம் படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. கமல், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், அனிருத் மற்றும் பலர் கலந்து கொண்டு சமபந்தியில் உணவுண்ணும் இந்த புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்தன.
இந்த உணவு மெனு பட்டியல் முன்னதாக வெளியாகி அனைவரையும் ஆச்சரியப் படுத்தி இருந்தது. குறிப்பாக மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசால் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவைக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால், ஐஸ்கிரீம், நறுக்கிய பழங்கள், பீடா உள்ளிட்ட பலவும் இந்த மெனுவில் இடம்பெற்றிருந்தன.
இந்த உணவுகளை சமைத்து சர்வ் பண்ணியது குறித்து இவற்றை சமைத்த பிரபல செஃப் மற்றும் இளம் ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். என்னது ஒரு இளம் ஹீரோ செஃப்-ஆ? ஆம், மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் தான் இவற்றை தயார் செய்தவர். இவருடைய மாதம்பட்டி பாகசாலா-வில் இருந்து விருந்துக்கான உணவு தயார் செய்யப்பட்டன.
மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ், பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் விக்ரம் சக்ஸஸ் மீட்டில் உணவுண்ணும் இடத்தில் கமல் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், “விக்ரம் சக்சஸ் மீட்டில் சர்வ் பண்ணியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கேப்சன் பதிவிட்டுள்ளார்.