நடிகர் யோகிபாபு தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர். முன்னதாக சில தமிழ்த் திரைப்படங்களில் சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் தோன்றிய யோகி பாபு பின்னர், முக்கிய நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தை ஏற்று நடித்தார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார் என்று சொல்லலாம். அந்த படத்தில் நயன்தாராவிடம் காதலை ப்ரொபோஸ் செய்யும் யோகிபாபுவுக்கு அந்த படத்தில் வந்த ஒரு பாடல் திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து குணச்சித்திர நடிகராக நடித்த யோகி பாபு கூர்கா, தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து புகழ்பெற்றார். அண்மையில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான நவரசா திரைப்படத்தில் பிரியதர்ஷன் இயக்கிய ‘சம்மர் ஆஃப் 92’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
தமது கைகளில் பல விதமான சாமி கயிறுகளை கட்டியிருப்பது யோகிபாபுவின் இன்னொரு கூடுதல் அடையாளங்களில் ஒன்று. அண்மையில் தான் தனக்கு பிறந்த ஆண்மகனுக்கு யோகிபாபு விசாகன் என பெயர் சூட்டியிருந்தார். இப்படி பாசிடிவாகவும் ஏறுமுகமாகவும் யோகிபாபுவின் வாழ்க்கை செல்வதற்கு எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்லும் யோகி பாபு, தம்முடைய கடவுள் நம்பிக்கையை பல இடங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரம் பேடு எனும் கிராமத்தில் இருக்கும் தமது சொந்த இடத்தில் வராகி அம்மன் கோயிலை கட்டியுள்ளார்.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் தற்போது விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதில் யோகிபாபு தமது குடும்பத்துடன் கலந்துகொண்டு தரிசனம் பெற்றார்.
தற்போது தல அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படத்திலும், மிர்ச்சி சிவா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கும் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்திலும் யோகிபாபு நடிக்கிறார்.
Also Read: KGF தயாரிப்புடன் கைகோர்க்கும் ‘சூர்யாவின்’ ஹிட் பட இயக்குநர் ?? சம்பவம் இருக்கு போலயே..