விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' எனும் தமிழ் சினிமாவை பகடி செய்யும் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பாலவிற்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியதோடு அந்நிகழ்ச்சியில் ஒரு சில எபிசோட்களில் நடித்தவர் நடிகர் பாபு.
பின்னர் 2009-ல் இயக்குனர் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இயக்குனர் அமீர், மதுமிதா நடித்து வெளியான 'யோகி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பின், நடிகர் பாபு என்பவர் யோகி பாபுவாக அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து 'கலகலப்பு', 'அட்டகத்தி', 'சென்னை எக்ஸ்பிரஸ்' (இந்தி), 'சூது கவ்வும்', 'வீரம்', 'மான் கராத்தே', 'அரண்மனை', 'வேதாளம்', 'யாமிருக்க பயமே' போன்ற படங்களில் சில காட்சிகளில் நடித்து கவனம் பெற்றார்.
பின்னர் இயக்குநர் மணிகண்டனின் இயக்கத்தில் வெளியான 'காக்கா முட்டை' 'ஆண்டவன் கட்டளை' திரைப்படங்கள் அவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. அதன் பிறகு தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களில் நடித்து முதன்மை நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
சமீபத்தில் தல அஜித்துடன் 'விஸ்வாசம்', சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் 'தர்பார்' என முன்னணி நடிகர்களின் படங்களில் முதன்மை நகைச்சுவை நடிகராக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் 'கோலமாவு கோகிலா', 'பரியேறும் பெருமாள்', 'கோமாளி', 'மண்டேலா' 'கர்ணன்' போன்ற படங்கள் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி அவரை குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு அழைத்துச்சென்றன. நடிகர் யோகி பாபு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தல அஜித்துடன் 'வலிமை', இளைய தளபதி விஜய்யுடன் 'பீஸ்ட்', சிவகார்த்திகேயனுடன் 'டாக்டர்', 'அயலான்'. சுந்தர்.சியின் 'அரண்மனை 3' என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.
இந்நிலையில் தனது பிறந்தநாளை யோகிபாபு ஜூலை 22 ம் நாள் கொண்டாடினார். அதை முன்னிட்டு லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் 'லெஜண்ட்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் யோகிபாபு, படக்குழுவினருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
லெஜண்ட் திரைப்படத்தை சரவணா ஸ்டோர் அருள் நடித்து தயாரிக்கிறார். உல்லாசம், விசில், தென்காசிப்பட்டினம் போன்ற படங்களை இயக்கிய விளம்பர பட இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்குகின்றனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.