ஜூலை 25-ஆம் தேதி, ஈசிஆர் அருகே வெகு வேகமாக, காரில் நண்பர்கள் மற்றும் தோழியுடன் சென்ற யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் யாஷிகாவும் அவரது நண்பர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக தாங்கள் பார்த்த அந்த உறையவைக்கும் காட்சிகளை பற்றி விவரித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த பெரியவர் பேசும்போது, “சம்பவம் நடந்ததும், சென்று நாங்கள் பார்த்த போது அவங்க தான் யாஷிகா என்று எங்களுக்கு தெரியாது. அடுத்த நாள் செய்தி பார்த்துதான் தெரிந்து கொண்டோம். யாஷிகாவுடன் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். இவர்கள் கூட வந்த இன்னொரு பெண் (வள்ளி செட்டி பவானி) காரின் மேல் பகுதி வெளியே Open ஆனதும் அந்த வழியே எகிறி அவர், பக்கவாட்டில் விழுந்திருக்கிறார்.
இதை யாராலும் கவனிக்க முடியவில்லை. எல்லாம் முடிந்து புறப்படும் போதுதான் அந்த பெண் அங்கு இருந்ததே தெரிந்தது. அதன்பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பும்போது, போகும் வழியிலேயே இறந்துவிட்டார் என்கிற செய்தி வந்தது. அவரை முதலிலேயே பார்த்து இருந்தால் கூட அவரை காப்பாற்ற வாய்ப்பு இருந்திருக்கும். இதில் யார் மீதும் தவறில்லை, அந்தப் பெண் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, இன்னொரு விடலைப்பருவ இளைஞர் கூறும்போது, “நள்ளிரவு 11.30 மணி இருக்கும். நான் சாப்பிட்டு வந்துகொண்டிருந்தபோது கார் செம்ம ஸ்பீடாக வந்து டிவைடரில் மோதி, நெருப்பு பொறி பறந்துகொண்டே போனது. அப்போ யாரோ ஒரு பாப்பா விழுந்து கிடப்பதாக அண்ணன் சொன்னார்.
சென்று பார்த்தபோதுதான் அது ஒரு அக்கா என தெரிந்தது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆயிடுச்சு.. போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வரும் வரை அக்கம்பக்கத்தினர் இருந்து பார்த்துக் கொண்டோம். காலையில் செய்தியில் பார்க்கும்போதுதான் ஒருவர் (வள்ளிசெட்டி பவானி) இறந்துவிட்டதாக தெரியவந்தது. ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அவருக்கு தான் முகத்தில் தண்ணீர் தெளித்து, மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டபோது துண்டு வைத்து ரத்தக்கறைகளை துடைத்தோம். கடைசியாக ஆதார் கார்டு அங்கு இருந்தது. அதை பார்த்தபோது தான் கார் ஓட்டிவந்தவர் பெயர் யாஷிகா என்று எங்களுக்கு தெரிஞ்சுது!” என தெரிவிக்கிறார்.
இதே சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு இளைஞர் பேசும்போது, “ஸ்பீடாக வந்த அந்த கார் டிவைடிரில், மோதி பல்டி அடித்து விழுந்தது. நாங்கள் எங்களுடைய அப்பா, அம்மா என மூன்று பேரும் அதை பார்த்தோம். கிட்டே சென்று ஒவ்வொருவரையும் காரிலிருந்து வெளியே எடுத்தோம்.
எல்லாரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு, ஒரு இருபது நிமிடம் கழித்துதான் பக்கவாட்டில் விழுந்து இருந்த அந்தப் பெண்ணை பார்த்தோம், அப்புறம் நிறைய பேர் வந்துவிட்டார்கள். ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ்க்கு போன் செய்து தகவல் கொடுத்தோம்.” என குறிப்பிட்டுள்ளார்.