தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளராக அறியப்படும் கொற்றவை சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் நடித்து கவனம் பெற்ற பேச்சிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பேச்சிலரில் கவனம் பெற்ற கொற்றவை…
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் GV பிரகாஷ் நடித்து இசையமைத்த பேச்சிலர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருந்தார். மென்பொருள் துறையில் பணிபுரியும் இளைஞர்களைப் பற்றிய படமாக உருவான பேச்சிலர் திரைப்படம் இளைஞர்களிடத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த எழுத்தாளர் ‘கொற்றவை’யின் கதாபாத்திரத்திற்கு அவரது ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
22 ஆண்டுகால திரைப் பயணம்….
இந்நிலையில், தமது 22 ஆண்டு கால திரைப்பயணம் குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள எழுத்தாளர் கொற்றவை, 90-களிலேயே சினிமாவில் கதாநாயகியாக நடிக்க, தன் அம்மாவின துணையுடன வாய்ப்புகளை தேடியதாகவும், மேலும் சில படங்களில் துணைக் கதபாத்திரங்களில் நடித்ததாகவும் குறிப்பிட்டு சில புகைப்படங்கள் மற்றும் த்ரோபேக் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பான தமது இடுகையில் பல சுவாரஸ்ய தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, அந்த பதிவில், “எப்படி வாய்ப்பு தேட வேண்டும் என்கிற வழியும் தெரியாமல், ஃபோட்டோ ஆல்பம், "கண்கவரும்" ஆடைகள் போன்றவற்றுக்கான பணமும் இன்றி, கையில் போஸ்டல் கார்டு சைஸ் போட்டோக்கள் சிலதுடன் கோடம்பாக்கத்தில் தெருத் தெருவாக நானும் அம்மாவும் ஏறி இறங்காத தெருக்களே இல்லை எனலாம் (1990ஸ்)” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
தங்கை, தோழி வேடங்கள்…
மேலும், “விடாமல் வாய்ப்புகள் தேடிய போது, 'ஓர் இரை கிடைக்கிறது' என்னும் வேட்கையுடன் பல கண்கள் பார்த்தன. உதவ சில நல்ல உள்ளங்களும் இருந்தன..அப்போதுதான் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் பிரசாந்த் பெண்களின் மனம் கவர் நடிகரானார். அடுத்த படம் ‘கிழக்கே வரும் பாட்டு’... வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் இயக்குனர் என் உறவினருக்கும் தெரிந்தவர் என்ற முறையில் "தோழி" வேடம் கிடைத்தது. அதன் பின் சரத்குமார் - ஆம்னி நடித்த, ‘இதுதாண்டா சட்டம்’ படத்தில் தங்கை வேடம்.. இடையில், ‘இது நம்ம பூமி’யில் ஏதோ ஒரு "தோழி" வேடம் என சில படங்களில் சிறு வேடங்கள் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
கேமராவுக்குப் பின்னால்…
மேலும் தமது அந்த பதிவில், “என் அப்பாவுக்கு நிரூபித்துவிட்டேன் என்னாலும் முடியுமென. அதன் பிறகு கல்லூரி.. விஸ். காம் படிப்பு... தொடர்ந்து இன்னொரு படத்தில் தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கோவை சென்று இறங்கிய போது... அந்த கதாபாத்திரத்திற்காக பிரபல நடிகையை மாற்றி விட்டோம்.. நீங்கள் தோழியாக நடியுங்கள் என்றார்கள். முடியாது நான் கிளம்புகிறேன் என்றபோது அந்த படத்தில் பி. ஆர். விஜயலக்ஷ்மி ஒளிப்பதிவாளர் என்றார்கள். ஒரு பெண் ஒளிப்பதிவாளரா... நானும் திரைக்குப் பின்னால் சென்று விட்டால் எப்படி இருக்கும்.. (அதுவே பாதுகாப்பு என்று நினைத்தேன்) ..” என தான் எடுத்த முக்கிய முடிவுப் பற்றி கொற்றவை கூறியுள்ளார்.
அழகிப் போட்டி…
இதனையடுத்து, “விஜயலட்சுமி மேடமிடம் இண்டர்னாக சேர்த்துவிட சொல்லி... உதவி ஒளிப்பதிவு துறையில் சேர்ந்து, ‘பாட்டு பாடவா’,‘வசந்தம் காலனி’ சீரியல் என்று பணிபுரிந்தேன். அப்போது பிரசாந்த் நடித்த,‘ஆணழகன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க விருப்பமா என்று கேட்டு எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு நடிக்க விருப்பமில்லை.. நான் திரைக்கு பின் இருக்கவே விரும்புகிறேன் என்றேன். பின்னர் என் போன்ற தோற்றமுடைய ஒரு நாயகியை அப்படத்துக்காக ஃபிக்ஸ் செய்ததாக கேள்விப்பட்டிருந்தேன். (இவை என் தரப்பு விபரங்கள் மட்டுமே.. ) ஆனாலும் நான் பெரிய நடிகை ஆகவில்லை என்று அப்பாவுக்கு கோவம்.. என் திமிரால் நான் அழியப் போகிறேன் என்றார். மீண்டும் சவால்.. நிரூபித்து காட்டுகிறேன் என்று சொல்லி எனக்கு தெரிந்த வழிகளில் மாடல் கோ ஆர்டினேட்டர் பெண்மணியிடம் என் புகைப்படத்தை கொடுத்து.... அழகிப் போட்டியில் கலந்து கொண்டு.. பட்டமும் வென்றேன்(1998).” என பல துறைகளில் பணியாற்றியதாகக் கூறியுள்ளார்.
குடும்ப வாழ்க்கை….
அழகி போட்டியில் வென்றதற்குப் பின்னர், “எனது பேட்டி, புகைப்படங்கள் பத்திரிகைகளில் வர... 7th channel மாலா மணியணிடம் இருந்து அழைப்பு வர "எத்தனை மனிதர்கள்" தொடரில் நடித்தேன். பிரபலமானேன். அடுத்து தனுஷ்கோடி(தொலைக்காட்சி தொடர்)... அரசியல் மாற்றத்தால் பாதியில் சீரியல் நிற்க... இதற்கிடையில் வின்சன்ட் செல்வா இயக்கத்தில் தொடுவானம் என்கிற சீரியலில் உதவி இயக்குநராக பணிபரிந்தேன்... அப்பாவுக்கு நிரூபித்தது போதும் என்று திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டேன்..
தற்போது, 22 ஆண்டுகள் கழித்து கொற்றவை என்கிற "ஆளுமையாக" பேச்சிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.. இயக்குனர் சதீஷ் செல்வக்குமார் மற்றும் தயாரிப்பாளர் தில்லிபாபு அவர்களுக்கு நன்றி. நிர்மலாவாக இருந்தபோது இருந்த சினிமா மாறி இருந்தது. கொற்றவையானதால் பார்வைகளும் மாறியது!” என சினிமாவில் தனது மறுவருகை குறித்து அந்த பதிவில் கூறியுள்ளார்.
அதுவும் ஒரு வேலைதானே..
மேலும், சினிமாவை விட்டு விலகிய தன்னுடைய முடிவு பற்றி அந்த பதிவில் குறிப்பிட்ட கொற்றவை, “என்னுடைய நிறைய புகைப்படங்கள் முன்னணி ஊடகங்களில் வந்தது. நான் எதையும் சேமித்து வைக்கவில்லை. எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு குடும்ப வாழ்க்கைக்குள் வந்துவிட்டேன். இந்த சமூகத்தில் நடிகைகள் பற்றி இருந்த தவறான புரிதலும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். அது என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. நம்மையும் இப்படிதானே பெயர் சொல்லி கூப்பிடுவார்கள் என்று. புனிதத்துவத்தின் மேல் நம்பிக்கை வைத்து முட்டாள் தனமாக முடிவெடுத்து சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு வாழ்வின் அடுத்த படிநிலைக்கு போய்விட்டேன். இன்று இருக்கும் தெளிவான அறிவு அன்று இருந்திருந்தால் நான் அதுவும் ஒரு வேலைதானே பாத்துக்கலாம் என்று தொடர்ந்திருப்பேன்..” எனக் கூறியுள்ளார்.
தற்போது எழுத்து, சமூக சிந்தனையுடன் திரைக்கதை, வசனம், நடிப்பு என பரபரப்பாக இயங்கிவரும் கொற்றவையின் இந்த பதிவை, பலரும் பகிர்வதுடன், அவருக்கு வாழ்த்துக்களை, தெரிவித்தும் வருகின்றனர்.